தொடர் கொள்ளை.. ஆனா எல்லாத்துலயும் ஒரே பார்முலா.. போலீஸ் போட்ட வலையில் சிக்கிய பலே திருடன்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கேரளா மற்றும் தமிழகத்தில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த நபரை காவல்துறை கைது செய்திருக்கிறது.

ஒருகாலத்துல நாடுகடத்தப்பட்டவர்.. இன்று பாகிஸ்தானின் பிரதமர்.. யார் இந்த ஷெபாஸ் ஷெரிஃப்?
திருட்டு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜலஜா தேவகுமாரி. மருத்துவராக பணிபுரிந்துவரும் இவரது வீட்டில் கடந்த 2 ஆம் தேதி வீட்டின் பூட்டுகளை உடைத்து 83 சவரன் நகைகளை மர்ம நபர் ஒருவர் திருடிச்சென்றிருக்கிறார். அதன் பிறகு, அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் ஜன்னல் கம்பிகளை வளைத்து உள்ளே இருந்த சிசிடிவி கேமராக்கள், ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்டவை களவுபோயிருக்கின்றன.
தனிப்படை
இதனை அடுத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த நபரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொள்ளை நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்த தனிப்படை அதிகாரிகள், கேரளாவிலும் இதே போன்ற பாணியில் கொள்ளை சம்பவ நடைபெற்றிருப்பதை அறிந்து அந்த வழக்கு குறித்த தகவல்களை பெற்றிருக்கின்றனர்.
ஒரே பார்முலா
தொடர்ந்து நடைபெற்றுவந்த திருட்டு சம்பவத்தில் கொள்ளையன் ஒரே மாதிரி கொள்ளையில் ஈடுபட்டதை காவல்துறையினர் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன் இடையே கேரளாவில் நடைபெற்ற கொள்ளையில் ஈடுபட்ட அந்த நபர் மீது சந்தேகம் வரவே அவரை காவல்துறையினர் தேடிவந்தனர்.
இந்நிலையில் கன்னியாகுமரியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த ஒருவரை காவல்துறை விசாரித்ததில் அவருக்கும் இந்த தொடர் கொள்ளைக்கு சம்பந்தம் இருப்பது தெரியவந்திருக்கிறது. பின்னர் அவரை காவல்துறை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திவந்தது.
வழக்குகள்
பிடிபட்ட நபரிடம் காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த 52 வயது ஜாய் என்பது தெரியவந்திருக்கிறது. மேலும், அவர் மீது பலதிருட்டு வழக்குகள் இருப்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண்," ஜாய் மீது கன்னியாகுமரி மாவட்டத்தில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், வடசேரி, பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி காவல் நிலையங்களில் தலா 1 வழக்கும், கோட்டாறு காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், தக்கலையில் 1 வழக்கு என 4 ஆண்டுகளில் 12 கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த நபரை காவல்துறை கண்டுபிடித்த சம்பவம் கன்னியாகுமரி பகுதி மக்களை நிம்மதியடைய வைத்திருக்கிறது.

மற்ற செய்திகள்
