ரெஸ்டாரண்ட் சுத்தி வந்த 'துர்நாற்றம்'.. "மேல இருந்த முதியவர் வீட்ட திறந்தப்போ, அங்கே கிடந்த எச்சரிக்கை கடிதம்.. அதிர்ந்து போன 'போலீஸ்'!!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் Brooklyn நகரத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக, பயங்கரமான துர்நாற்றம் வீசுவதை அப்பகுதியில் இருந்த உணவகம் ஒன்றின் உரிமையாளர் கண்டறிந்துள்ளார்.
ஆரம்பத்தில், தனது உணவகத்திற்குள் இருந்து வரும் நாற்றம் என கருதிய அதன் உரிமையாளர், உணவகம் முழுவதும் சுத்தம் செய்து பார்த்துள்ளார். அப்படி இருந்தும் அந்த நாற்றம் போகவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே, தனது உணவகத்தின் மேல் உள்ள குடியிருப்பில், சுமார் 75 வயதாகும் ஜான் என்னும் முதியவர் ஒருவரும் கடந்த பல நாட்களாக வெளியே வருவதில்லை என்பது அவருக்கு தோன்றி உள்ளது.
உடனடியாக, தனது பகுதியில் துர்நாற்றம் வீசுவது பற்றி, அங்கிருந்த உணவகத்தின் உரிமையாளர் போலீஸுக்கு தகவல் அளித்துள்ளார். இது தொடர்பாக, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜான் தங்கி இருந்த வீட்டை சோதனையிட சென்றுள்ளனர். அப்போது, அவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அவரது வீட்டிற்குள் சில அபாய லேபில்களுடன் கூடிய பைகள் நிறைய இருந்த நிலையில், அங்கே இருந்த நாற்காலி ஒன்றில், அழுகிய நிலையில் ஜான் இறந்து போயிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரு வாரத்திற்கு முன்னர் அவர் இறந்து போயிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ஜானின் வீட்டிற்குள் போலீசார் தொடர்ந்து சோதனை மேற்கொண்ட நிலையில், அங்கிருந்து சில ரசாயன பொருட்கள், வரைபடங்கள், ஓவியங்கள், பேட்டரி, சிலிண்டர் உள்ளிட்ட சில அபாயகரமான பொருட்களையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதே போல, அங்கே ஆபத்தான சில ரசாயன பொருட்கள் இருந்ததால், பாதுகாப்பு கவசம் அணிந்த படி, போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதே போல, அங்கிருந்த துண்டு காதிதம் ஒன்றில், "எச்சரிக்கை - ஆபத்து, இந்த கதவை திறக்காதே. ஏன் இறக்க வேண்டும்?" என எழுதப்பட்டுள்ளது. தனது வீட்டில் ரசாயன கலவைகள் இருந்ததால், தன்னுடைய பகுதியில் வசித்து வருபவர்கள், வீட்டில் நுழைவதற்கு முன்பான எச்சரிக்கையாக இதனை எழுதி வைத்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.
அதே போல, ஒரு தாக்குதலுக்கு தயாராகும் பொருட்களை வைத்திருந்த முதியவர் எதற்காக அப்படி செயல்பட்டு வந்தார் என்பது போலீசாரை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டு வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள மக்கள், அந்த முதியவரை பழகுவதற்கு சிறந்த மனிதர் என்றும், மற்றவர்கள் மீது அக்கறை கொண்ட மனிதர் என்றும் குறிப்பிடுகிகின்றனர். மனைவி மற்றும் குடும்பத்தினரை பல ஆண்டுகளுக்கு முன் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் ஜான் என்ற அந்த முதியவர், எதற்காக அபாயகரமான பொருட்களை சேகரித்து வந்தார் என்பது மர்மமாகவே உள்ளது.