'ஹெலிகாப்டரிலிருந்து' பணம் 'கொட்டுவார்களா?...' 'வீட்டு வாசலில்' காத்திருந்த 'கிராம மக்கள்...' 'வதந்தி பரப்பிய' தனியார் சேனலுக்கு 'நோட்டீஸ்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Apr 17, 2020 04:04 PM

நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஹெலிகாப்டர் மூலம் பணத்தை பொதுமக்களுக்கு அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக கர்நாடகாவைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று செய்தி ஒளிபரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அந்த சேனலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

pm modi to drop cash from chopper tv channel slapped notice

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஊரடங்கு அறிவிப்பின் போது மத்திய அரசு சில, நிதியுதவி குறித்த அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால், தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில், நிதியுதவி தொடர்பாக பல்வேறு போலி செய்திகள் உலாவி வருகின்றன. பொதுமக்கள் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிற்கும் பிரதமர் மோடி 15 ஆயிரம் ரூபாய் செலுத்துகிறார் என்ற வதந்தி பரவ அதனை மத்திய அரசு மறுத்திருந்தது.

இந்த நிலையில் கர்நாடகாவில் ஒளிபரப்பாகும் தனியார் சேனல் ஒன்று, ஹெலிகாப்டரில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளாக தூவ பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக தவறான செய்தி ஒன்றை ஒளிபரப்பியது.

இந்த செய்தியை மறுத்துள்ள பத்திரிகை தகவல் அலுவலகத்தின் துணை இயக்குநர் ஜெனரல் நாகேந்திர சுவாமி, “பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் பணத்தை தூவ இருப்பதாக வெளியான செய்தி, முற்றிலும் தவறானது. இந்த செய்தியால் பல கிராமத்தினர் வீட்டுக்கு வெளியே காத்திருந்தனர்” என கூறியுள்ளார்.

தவறான தகவலை பரப்பியதற்காக அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மக்களிடையே குழப்பத்தையும், சமூக அமைதியையும் குலைக்கும் வகையில் இருப்பதால் டிவி சேனல் ஒளிபரப்பை ஏன் தடை செய்யக் கூடாது? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க அந்த சேனலுக்கு 10 நாட்கள் அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.