புள்ள குட்டிங்க 'பசியால' துடிக்குது... 'பார்க்க வேதனையா இருக்கு, அதான்...' நாங்க வேற என்ன பண்றது...? - கண்ணீரோடு 'ஆப்கான்' மக்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தான் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்று. தற்போது தாலிபான்கள் ஆட்சியைவிட அங்கு நிலவி வரும் வறட்சி மற்றும் பொருளாதார சரிவு உலக மக்களை கவலையடைய செய்துள்ளது.
உணவுப் பொருட்கள் இந்த மாதம் தீர்ந்துவிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள நிலையில், அங்கு பலர் பட்டினியுடன் இருந்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் விவசாய உற்பத்தி சார்ந்தே அங்கே பொருளாதாரம் உள்ளது. கடந்த சில வருடங்களாக அங்கு நிலவி வரும் வறட்சியால் விவசாயம் என்பது இல்லாமல் போய்விட்டது. கொரோனா மற்றும் உள்நாட்டு போர் காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் அடிமட்டத்துக்கு போய்விட்டது.
தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகிதீன் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, சீனா மற்றும் ரஷ்யாவின் நிதி உதவியையே வருங்காலத்தில் தங்களின் நாட்டை மீள் கட்டமைக்க பெரும்பாலும் உதவும் என தெரிவித்திருந்தார். ஆனால், ரஷ்யாவும், சீனாவும் இது குறித்து வாய் திறக்கவில்லை.
மேலும், ஆப்கானிஸ்தானில் இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டில் சுமார் 97% மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே செல்லும் அபாயம் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. மேலும், ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் ஆப்கானிஸ்தான் மக்களுக்காக 600 மில்லியன் டாலர் அளவில் நிதி திரட்டும் முயற்சியை முன்னெடுக்க இருப்பதாக அறிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்து வரும் கடுமையான பஞ்சநிலை காரணமாக தற்போது ஆப்கான் மக்கள் தங்களின் உடைமைகளை விற்கத் தொடங்கியுள்ளனர். பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டிற்கு வெளியிலேயே சிறிய கடைகளை அமைத்து தங்கள் உடைமைகளை சிறிய தொகைக்கு விற்கத் தொடங்கியுள்ளனர்.
அதோடு, இந்தியாவும் ஆப்கானியர்களுக்கு உறுதுணையாக இருக்க தயார் எனவும், அனைத்து பிரிவினருக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.