'எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு!.. உங்க வேலய மட்டும் பாருங்க'!.. பாகிஸ்தான் தலையீட்டால் ஆப்கானில் வெடித்த போராட்டம்!.. சரமாரி துப்பாக்கிசூடு!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தாலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15ம் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர்.
![taliban fire warning shots at anti pakistan protest in kabul taliban fire warning shots at anti pakistan protest in kabul](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/taliban-fire-warning-shots-at-anti-pakistan-protest-in-kabul.jpg)
இதையடுத்து, அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதனால் ஆட்சி அதிகாரம் தங்கள் வசமனதாக அறிவித்த தாலிபான்கள் விரைவில் புதிய அரசு அமையும் என தெரிவித்தனர்.
இந்த புதிய அரசில் தாலிபான் அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரும் அந்த அமைப்பின் தற்போதைய தலைவருமான முல்லா அப்துல் கனி பரதருக்கு அதிபர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தாலிபான் அமைப்புக்கும், ஹக்கானி வலைக்குழுவுக்கும் இடையே சமீபத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ஹக்கானி குழுவின் தலைவர் ஆனஸ் ஹக்கானிக்கும் தாலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் இந்த வாக்குவாதம் முற்றி இரு தரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் முல்லா அப்துல் கனி பரதர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே இரு தரப்புக்கும் இடையிலான இந்த பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்த்து வைப்பதற்காக பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவர் பைஸ் ஹமீது காபூலுக்கு விரைந்தார்.
அவர் இரு தரப்பையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாலிபான்கள் குழுவில் இருக்கும் தீவிரமான பாகிஸ்தான் ஆதரவாளர்களுக்கு உயர் பதவிகளை பெற்றுத்தர பாகிஸ்தான் முயன்று வருகிறது. முல்லா கனி பரதர், ஆனஸ் ஹக்கானி இரண்டு பேருமே பாகிஸ்தான் ஆதரவாளர்கள்தான். எனினும், ஹக்கானி தீவிரமான பாகிஸ்தான் அனுதாபி என்பதால் அவரை அதிபராக்க பாகிஸ்தான் விரும்புகிறது. இதை பரதர் குழு விரும்பவில்லை என்பதால்தான் அங்கு அதிபரை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தாலிபான்களுக்கு உள்ளேயே கடுமையான மோதல்கள் ஏற்பட்டுள்ளது. தாலிபான் படைகள் இப்படி மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், பாகிஸ்தானின் இந்த குறுக்கீடுக்கு எதிராக அங்கு மக்கள் போராடி வருகிறார்கள்.
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் தலையிடக் கூடாது என்று கூறி காபூலில் மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் அதிகாரம் செலுத்த நினைப்பதும், தங்களுக்கு விருப்பமான நபர்களை ஆட்சிக்கு கொண்டு வர நினைப்பதையும் ஆப்கான் மக்கள் விரும்பவில்லை.
காபூலில் குவிக்கப்பட்டு இருக்கும் தாலிபான் படைகள், போராட்டக்காரர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர். வானத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. கூட்டத்தை நோக்கியும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதா, யாராவது பலியானார்களா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மக்கள் மீது, தாலிபான்கள், தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)