நாலஞ்சு தாலிபான்கள் என் ‘வீட்டுக்கு’ வந்தாங்க.. அப்போதான் தெரிஞ்சது அவங்க யாருன்னு.. பகீர் தகவலை வெளியிட்ட ‘பெண்’ நீதிபதி..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானில் இருக்கும் பெண் நீதிபதிகளுக்கு தாலிபான்களால் ஆபத்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றினர். இதனை அடுத்து லட்சக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். முன்னதாக இருந்த தாலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆட்சி அமைக்க உள்ள தாலிபான்கள், ஷரியத் சட்டத்துக்கு உட்பட்டு பெண்களுக்கு உரிமை வழங்கப்படும் என தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஆப்கானில் உள்ள சுமார் 250 பெண் நீதிபதிகளுக்கு தாலிபான்களால் ஆபத்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தாலிபான்கள் ஆப்கானை கைப்பற்றியதும், அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான தாலிபான்கள் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். தற்போது அவர்களுக்கு தண்டனை வழங்கிய பெண் நீதிபதிகள் குறித்து விசாரித்து வருவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஆப்கானில் இருந்து வெளியேறிய பெண் நீதிபதி ஒருவர் Reuters செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ‘காபூல் உள்ள எனது வீட்டுக்கு நான்கு, ஐந்து தாலிபான்கள் வந்து என்னைப் பற்றி விசாரித்துள்ளனர். அப்போதுதான் தெரிந்தது, அவர்கள் அனைவரும் என்னால் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்று. தற்போது ஆப்கானில் இருக்கும் பெண் நீதிபதிகளுடன் தொடர்பில்தான் இருக்கிறேன். தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், விரைந்து மீட்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்’ என பெண் நீதிபதி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சர்வதேச பெண் நீதிபதிகள் சங்கம் மற்றும் மனித உரிமைகள் அமைப்பினரின் உதவியுடன் ஆப்கானை விட்டு பெண் நீதிபதிகள் சிலர் வெளியேறினர். அப்படி வெளியேறியவர்களுள் இவரும் ஒருவர். இந்த நிலையில் ஆப்கானில் உள்ள மற்ற பெண் நீதிபதிகளையும் மீட்கும் முயற்சியில் மனித உரிமை ஆர்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் இரண்டு ஆப்கான் உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகளை தாலிபான்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.