'இந்தியாவில் 'வாட்ஸ் அப் பே'க்கு கிரீன் சிக்னல்'... 'கூகுள் பே, பேடிஎம்-க்கு கடும் போட்டி'... அப்படி என்ன இதில் ஸ்பெஷல்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ் அப் என்பது உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். தற்போது வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு என்ற அளவுக்கு, குறுஞ்செய்தியில் அனைத்து விவரங்களையும் கொண்டு சேர்க்கும் அளவிற்கு வாட்ஸ் அப் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்தச் செயலியை இந்தியா முழுவதும் சுமார் 40 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வாட்ஸ் அப் மூலம், பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதிகள் குறித்த ஆய்வுகள் கடந்த ஓராண்டாகவே நடைபெற்று வந்தன. இதில் 10 லட்சம் பயனாளிகளின் வாட்ஸ் அப் கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பயனாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த நிலையில், யுபிஐ மூலமாக பணப்பரிவர்த்தனை சேவைகளை வாட்ஸ் அப் வழங்க மத்திய அரசின் என்.பி.சி.ஐ அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற செயலிகள் பணப்பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் வாட்ஸ் அப் பேவும் இந்த போட்டியில் குதித்துள்ள நிலையில் பணப் பரிமாற்றம் என்பது மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிடும் எனக் கூறப்படுகிறது. வாட்ஸ் அப் ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலம் என்பதோடு, இந்த செயலியைப் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இது வாட்ஸ் அப் பேக்கு கூடுதல் சாதகமாக அமைந்துள்ளது. எனவே வாட்ஸ் அப் பே மீதான நம்பக தன்னை என்பது மக்களிடையே அதிகமாகவே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று வாட்ஸ் அப் பேவின் வரவு மற்ற செயலிகளுக்கும் பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். இதற்கிடையே வாட்ஸ் அப் பே சேவைக்கு இந்தியாவில் அனுமதி கிடைத்திருப்பது குறித்து பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கூறும் போது, இந்தியா முழுவதும் வாட்ஸ் அப் பே சேவைக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், இதை சாத்தியமாக்கிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வாட்ஸ் அப் மூலமாக உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எந்த கட்டணமும் இன்றி நீங்கள் பணம் செலுத்த முடியும். இந்த பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானது” என்று தெரிவித்துள்ளார்.