'54' வயசுல தொலைஞ்சவங்க... இப்போ '94' வயசுல கெடச்சுருக்காங்க... 'வாட்ஸ்அப்' உதவியால் மீண்டும் இணைந்த 'ஃபேமிலி'!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது 54 வயதில் காணாமல் போன பெண் ஒருவர் தனது 94 வது வயதில் மீண்டும் குடும்பத்துடன் இணைந்துள்ளார்.
1979 ஆம் வருடம் மத்திய பிரதேச மாநிலத்தின் சாலையோரம் பரிதாபமான நிலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை அந்த வழியாக வந்த லாரி ஓட்டுனர் ஒருவர் பார்த்துள்ளார். அந்த பெண்ணை தேனீக்கள் அதிகமாக கடித்திருந்த நிலையில், சரியாக பேச முடியாமல் இருந்துள்ளார். இதனால் அந்த ஓட்டுனர் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து சென்று கவனித்து வந்துள்ளார்.
ஓட்டுனரின் குடும்பத்தினர் அந்த பெண்ணை அச்சான் மவுசி என பெயரிட்டு அழைத்து வந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ஓட்டுனரின் மகன் இஸ்ரான் கான் கூறுகையில், 'மவுசி எங்கள் வீட்டிற்கு வந்த போது நான் சிறுவன். அவர் அடிக்கடி மராத்தி மொழியில் ஏதேனும் புலம்புவார். அவர் குடும்பத்தினர் குறித்த தகவலை கேட்கும் போது எதுவும் கூற மாட்டார். மவுசி குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டேன். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. அவர் கஞ்மா நகர் என்ற இடத்தை பற்றி கூறுவார். ஆனால் கூகுளில் அந்த இடம் தொடர்பான தகவல் எதுவும் கிடைக்கவில்லை' என்றார்.
தொடர்ந்து ஊரடங்கு காலத்தில் மவுசி, பரஸ்பூர் என்ற இடத்தை கூறியுள்ளார். அதனை இஸ்ரான் கான் கூகுள் செய்த போது மகாராஷ்டிரா மாநிலத்தில் அப்படி ஒரு ஊர் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கடந்த மே மாதம் பரஸ்பூர் பகுதியில் கடை நடத்தி வரும் நபர் ஒருவரை தொடர்பு கொண்ட இஸ்ரான், மவுசு குறித்த தகவலை கூறி, வீடியோ ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
இந்த வீடியோவை கடைக்காரர் தனது வாட்ஸ்அப் வழியாக அனைவருக்கும் பகிர பிரித்வி என்பவர் அது தனது பாட்டி தான் எனக் கூறி, இஸ்ரான் கானை தொடர்பு கொண்டுள்ளார். ஊரடங்கின் காரணமாக மத்திய பிரதேச மாநிலம் செல்ல இயலாத நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக தனது பாட்டியை பிரித்வி அழைத்து வந்துள்ளார்.
தனது பாட்டி மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 1979 ஆண்டு சிகிச்சைக்காக நாக்பூர் சென்ற போது அவர் மாயமானதாக பிரித்வி தெரிவித்தார். பிரித்வியின் தந்தை, தனது தாயை பல நாட்கள் தேடி அலைந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் உயிரிழந்து விட்டார். அதற்கு முன் தனது பாட்டி கிடைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றும் பிரித்வி தெரிவித்தார். 40 வருடங்களுக்கு முன் தொலைந்த பெண் ஒருவர் இணையத்தின் உதவியால் தனது குடும்பத்தாருடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
93 years old Panchu Bai in MP, reunited with her family in Vidarbha after " #lockdown googling, she was living with a Muslim family in Damoh.They wept inconsolably when her grandson drove her home @ndtv @ndtvindia @sohitmishra99 @RajputAditi @sanket #HappyFathersDay2020 pic.twitter.com/tQb0p1xDge
— Anurag Dwary (@Anurag_Dwary) June 21, 2020