"நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டிய காலம் வந்துவிட்டது!".. ரத்தன் டாடா உருக்கமான கடிதம்!.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > இந்தியாடாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களுள் ஒருவரான ரத்தன் டாடா, இணையத்தில் இருக்கும் வெறுப்புணர்வு குறித்தும், வசைச் சொற்களால் பிறர் மனதை புண்படுத்துவது பற்றியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஊரடங்கு காரணத்தால் மக்களுக்கு மனநலம் சார்ந்த சிக்கல்கள் சமீப காலத்தில் அதிகரித்து வருகின்றன. இதனால், மனநல ஆரோக்கியம் தற்போது சமூகத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இது குறித்து, பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, "இந்த வருடம் அனைவருக்கும் மிகவும் சவால் நிறைந்ததாக அமைந்துள்ளது. இணையவாசிகள், தங்களுக்கிடையே அதிக அளவில் வெறுப்புணர்வையும், பிறர் மனதை புண்படுத்தும் வகையில் வசைச் சொற்கள் பயன்படுத்துவதையும் நான் பார்க்கிறேன்.
இந்த வருடத்தில் நாம் ஒருவருக்கொருவர் உதவியாகவும், ஒற்றுமையுடனும் இருக்க வேண்டுமே தவிர மற்றவர்களை காயப்படுத்துவதற்கான நேரம் இது அல்ல. நம் அனைவருக்கும் இடையே நல்ல புரிதலும், அதிக அன்பும், அதிக பொறுமையும் இன்று தேவைப்படுகிறது.
நான் இணையத்தில் அதிக நேரம் செலவிடுவதில்லை என்றாலும், இது அரவணைப்பும், ஊக்கமும் நிறைந்த தளமாக மாறும் என நம்புகிறேன். நம்முடைய நோக்கம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், வெறுப்பு மற்றும் காழ்ப்புணர்ச்சியைத் தவிர."
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மத்தியில், நம் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு, பிறரது உணர்வுகளுக்கும் உறுதுணையாக நின்று மனிதம் போற்றுவோமாக.

மற்ற செய்திகள்
