இந்தியாவுல 4ஜி 'மட்டும்' தான் இருக்கணும்.. மக்களே 'முடிவு' பண்ணட்டும்.. செம சண்டை!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Manjula | Nov 22, 2019 12:27 AM
இந்தியாவில் 4ஜி சேவைகள் மட்டும் தான் இருக்க வேண்டும் என ஜியோ நிறுவனம் விரும்புகிறது. இதனால் இந்தியாவை 2ஜி சேவை அல்லாத நாடாக அறிவிக்க வேண்டும் என ஜியோ நிறுவனம் மத்திய அரசு மற்றும் டிராயிடம் கோரிக்கை வைத்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சேவைகளை மட்டுமே வழங்கி வருகிறது. ஆனால் வோடபோன், ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் 2ஜி,3ஜி,4ஜி என அனைத்து விதமான சேவைகளையும் வழங்கி வருகின்றன. ஜியோவின் இந்த கோரிக்கையால் கொதிப்படைந்த ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் மக்கள் தங்களுக்கு என்ன சேவை வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்யட்டும் என்று கடுமையாக பதிலடி கொடுத்துள்ளன. ஏனெனில் ஏர்டெல், வோடபோன் இரு நிறுவனங்களும் 2ஜி வாடிக்கையாளர்களின் வருவாயை தான் பெரிதும் நம்பியுள்ளன.
இதுதொடர்பாக செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (சிஓஏஐ) டைரக்டர் ஜெனரல் ராஜன் மேத்யூஸ் கூறுகையில், "ஆபரேட்டர்கள் ஒரு நெட்வொர்க்கிற்குச் செல்ல விரும்புகிறார்கள், அது அவர்களுக்கும் பணத்தை மிச்சப்படுத்துகிறது. ஆனால் மக்கள் செய்ய விரும்பவில்லை என்றால் அதை செய்யுமாறு மக்களை நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது. சந்தையில் எது வேண்டும் என்பதை வாடிக்கையாளரே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும்,'' என தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்னும் 40 கோடி மக்கள் 2ஜி சேவையைத் தான் பயன்படுத்தி வருகிறார்கள் என சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் டிராய்க்கு கடிதம் எழுதி இருந்தது. மேலும் ஐயுசி கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்ற முடிவினை ரத்து செய்வதே நல்லது என்றும் ஏர்டெல் வலியுறுத்தி உள்ளது. பெருத்த நஷ்டத்தால் வரும் டிசம்பர் 1 முதல் கட்டணங்களை உயர்த்த ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் திட்டமிட்டு வரும் வேளையில் இந்தியாவை 2ஜி அல்லாத நாடாக மாற்ற வேண்டும் என ஜியோ கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
