ரஷ்யாவை விட்டு வெளியேறும் லட்சக்கணக்கான மக்கள்.. எல்லாத்துக்கும் அந்த ஒரு அறிவிப்பு தான் காரணமாம்..வெளியான சாட்லைட் புகைப்படங்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யாவை விட்டு லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்ட ஒரு அறிவிப்பு தான் காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்.
உக்ரைன் விவகாரத்தில் மேற்கு உலக நாடுகள் தொடர்ந்து ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவருகின்றன. குறிப்பாக உக்ரைனுக்கு அதிக அளவில் ராணுவ உதவிகளை அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் செய்துவருவது அந்த பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக இழந்த பகுதிகளை உக்ரைன் மீட்க துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தாக்குதலை பெரிதுபடுத்த ரஷ்ய அதிபர் புதின் உத்தேசித்திருப்பதாக உலக அளவில் பரபரப்புடன் பேசப்பட்டது. இதனை நிரூபிக்கும் வகையில் ரஷ்ய ராணுவத்தில் 3 லட்சம் வீரர்களை இணைக்க புதின் உத்தரவிட்டிருந்தார்.
அறிவிப்பு
அண்மையில் இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த அறிவிப்பில்,"மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை அழிக்க நினைக்கின்றன. மேற்கத்திய நாடுகளின் சக்திகளுக்கு எதிராக உக்ரைனில் போரிட வேண்டும். . 20 லட்சம் வீரர்களுடன் போர் தொடுக்க வேண்டும். இதில் ஒரு பகுதியாக சுமார் 3 லட்சம் பேரை ரஷ்யாவில் இருந்து திரட்டும் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளேன். உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கும் திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்திருந்தார் புதின்.
இந்த அறிவிப்பு ரஷ்ய மக்களை நடுநடுங்க செய்துவிட்டது. போரில் பங்கேற்க கட்டாயப்படுத்தும் செயல் இது என மக்கள் தெரிவித்துவந்த நிலையில் லட்சக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறிவருவதாக உலக நாடுகள் தெரிவித்திருக்கின்றன. இது ஒருபுறம் இருக்க, புதினின் இந்த அறிவிப்பை எதிர்த்து மக்கள் போராட்டத்திலும் இறங்கியுள்ளனர்.
சாட்லைட் புகைப்படங்கள்
இந்நிலையில், ஜார்ஜியா, கஜகஸ்தான் மற்றும் மங்கோலியாவுடனான ரஷ்யாவின் எல்லைப் பகுதியில் ஏராளமான கார்கள் நீண்ட வரிசையில் நிற்பது சாட்லைட் புகைப்படங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. மேலும், விமானங்கள் மூலமாக ரஷ்யாவில் இருந்து வெளியேறவும் மக்கள் ஆர்வம் காட்டுவதாக உலக நாடுகள் தெரிவித்துவருகின்றன. அதன் அடிப்படையில் ரஷ்யாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் விமானங்களின் டிக்கெட் விலை கிட்டத்தட்ட 10 மடங்கு உயர்ந்துள்ளது. இந்த விவகாரம் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.