தருமபுரி: கொரோனா ஊரடங்கை மீறி சிக்கன் சாப்பிடும் விழா நடத்தியவர்கள் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்கள் என மொத்தம் 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கல் தினத்தையொட்டி கபடி, ஊசிநூல் கோர்த்தல், உரி அடித்தல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, லெமன் ஸ்பூன், கைப்பந்து, உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த 16ஆம் தேதி கறி நாள் என்பதால் கிராம மக்கள் சொந்த பகுதியிலேயே பல்வேறு போட்டிகள் வைத்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில், முக்கால்வாயன்பட்டி கிராமத்தில் பொங்கல் தினத்தன்று ஆண்டுதோறும் கிராம மக்கள் ஒன்றிணைந்து ஒரு கிலோ சில்லி சிக்கன் சாப்பிடும் போட்டி நடத்துவது வழக்கம். இதேபால் இந்த ஆண்டும் ஒரு கிலோ சில்லி சிக்கன் சாப்பிடும் போட்டி இளைஞர்களுக்காக அறிவித்து, பந்தல் அமைத்து ஒரே இடத்தில் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டிக்காக 15 கிலோ சிக்கன் பொரித்து போட்டியில் கலந்து கொண்ட 15 இளைஞர்களை ஒரு டேபிளுக்கு 3 பேர் என சமூக இடைவெளியில் அமர்ந்து ஒரு கிலோ சில்லி சிக்கன் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது. இதேபோன்று குறிப்பிட்ட நேரத்தில் அதிகளவு பிரியாணி சாப்பிடும் போட்டியும் அங்கு நடந்தது. இந்த போட்டியில் 21 இளைஞர்கள் கலந்து கொண்டு சில்லி சிக்கன் மற்றும் பிரியாணியை உற்சாகமாக சாப்பிட்டனர்.
பொங்கல் பண்டிகையிலேயே இவை வித்தியாசமான போட்டி என்பதால், ஏராளமான மக்கள் போட்டியை கண்டு ரசித்தனர். ஜனவரி 16ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கொரோனா விதிகளை மீறி போட்டி நட்டத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அதியமான்கோட்டை காவல் நிலைய போலீசார் முக்கல்நாயக்கன்பட்டி கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியது, தொற்று பரவும் வகையில் கூட்டத்தை கூட்டியது தொடர்பாக விழா நடத்தியவர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்றவர்கள் உள்ளிட்ட 40 பேர் மீது அதியமான்கோட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்
