கோவை கோவில் திருவிழா.. மோதிக் கொண்ட இளைஞர்களை பிடித்து தலா 100 திருக்குறள் எழுத வைத்த போலீசார்
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோயில் திருவிழாவில் கலாட்டா செய்த இளைஞர்களைப் பிடித்து கோவை போலீஸார் வித்தியாசமான தண்டனை ஒன்றை கொடுத்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை பகுதியில் கோயில் திருவிழா ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது இளைஞர்கள் சிலர் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி திட்டிக்கொண்டு இருந்துள்ளனர். இது தொடர்ந்து கைகலப்பாக மாறி உள்ளது.
கைகலப்பில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட இளைஞர்களை பின்னர் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மதுக்கரை போலீஸார் சண்டையிட்டுக் கொண்ட இளைஞர்களின் மன்னிப்பை முதலில் பெற்றுக் கொண்டனர். பின்னர் அவர்களுக்கு தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை தான் தற்போது ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
மதுக்கரை போலீஸார் சண்டையில் ஈடுபட்ட சுமார் 10 இளைஞர்களையும் திருக்குறள் எழுதச் சொல்லி போலீஸார் தண்டனை கொடுத்துள்ளனர். அதுவும் ஒன்று, இரண்டு அல்ல 100 திருக்குறள்களை எழுதச் சொல்லி தண்டனை கொடுத்துள்ளனர் மதுக்கரை போலீஸார். திருக்குறளும் திருவள்ளுவரும் சமீப காலத்தில் மிகவும் பிரபலமடைந்து வரும் பெயர்களாக உள்ளது.
இந்த சூழலில் 100 திருக்குறள்களையும் கைகளால் பேனா பேப்பர் கொடுத்து எழுத வைத்துள்ளனர் போலீஸார். பல இடங்களில் ட்ராபிக் போலீஸார் விதிமீறும் இளைஞர்களை 10 திருக்குறள்கள் அல்லது 20 திருக்குறள்களை எழுத வைத்துள்ள சம்பவங்களும் இதற்கு முன்னர் தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.