ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்கிறதா?- நடவடிக்கை எடுக்கத் தயாராகும் கோவை போலீஸார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சமுக வலைதளங்களில் பிரபலமான ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர் ஆகியோர் கோவை போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதில் ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டம் பாய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 31.12.2021 ம் தேதி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஒரு யூட்யூபர் புகார் ஒன்றை பதிவு செய்தார். சுப்புலட்சுமி (எ) ரவுடி, பேபி சூர்யா நடத்தி வரும் Surya Media மற்றும் சிக்கந்தர்ஷா (எ) சிக்கா நடத்தி வரும் Singer Sikka Official ஆகிய யூட்யூப் சேனல்களில் புகார்தாரரை பற்றி மிகவும் இழிவாகவும் ஆபாசமாகவும் உருவ கேலி செய்தும் தொடர்ந்து பேசிவந்துள்ளனர்.
மேலும் தொடர்ந்து சமூக இணையதளத்தில் ஆபாசமாகவும் இழிவாகவும் பார்ப்பவர்களை முகம் சுளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு கொண்டிருக்கும் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர்ஷா (எ) சிக்கா ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறும் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து புகாரைப் பெற்றுக் கொண்ட கோவை மாவட்ட போலீஸார் ஐபிசி பிரிவுகள் 294(b), 354(A), 354(D), 509 109 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகள், 56(D) 67 IT ACT 2000 மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் சட்டப்பிரிவு 4 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து மதுரையில் தலைமறைவாக இருந்த சூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகிய இருவரையும் சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் இவர்கள் சமூக வலைதளங்களில் சமூகத்தையும் இளைஞர்களையும் சீரழிக்கும் தவறான விஷயங்களை பதிவு செய்து வருகிறார்கள்; இதனால் சமூகத்தில் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லக்கூடும் என்பதால் இவர்களது யூட்யூப் சேனல்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே ரவுடி பேபி சூர்யா மீது பல்வேறு மாவட்டங்களிலும் வழக்குகள் பதிவாகி உள்ளதால் அவர் மீது குண்டர் சட்டம் பாய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.