குடும்பத்துடன் திருத்தணி சென்ற பெண் காவலர்.. உடைந்து கிடைந்த வீட்டின் கதவு.. சென்னையில் நடந்த துணிகரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் தலைமை பெண் காவலர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியில் காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு திருவெற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமை பெண் காவலர் சத்யா குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் திருத்தணி சென்றுள்ளார்.
இந்த நிலையில் காவலர் சத்யாவின் வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதை அருகில் வசிக்கும் மற்றொரு காவலரான சிவக்குமார் பார்த்துள்ளார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் கதவு உடைக்கப்பட்டு, துணிகள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனை அடுத்து உடனடியாக காவலர் சத்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுகுறித்து கூறியுள்ளார். அப்போது, வீட்டில் 14 சவரன் நகையும், 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணமும் இருந்ததாகத் சத்யா தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இவை அனைத்தும் திருடு போயுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவலர் குடியிருப்பில் தலைமை பெண் காவலரின் வீட்டிலேயே திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.