
'எங்க கழுதைகள காணோம் சாமி... எல்லாம் 14 லட்சம் ரூபாய் மதிப்புங்க'- விநோத முறையில் போலீஸாரை திணறடிக்கும் கிராமம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியா'எங்க கழுதைகள காணோம்ங்க... நீங்க தான் கண்டுபிடிச்சுத் தரணும்' போலீஸ் ஷ்டேஷன் முன்னர் விநோத முறையில் ஒரு கிராமத்தினர் புகார் அளித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் மக்களின் அன்றாட தேவைகளுக்கு அதிகம் பயன்படுவதும் உதவுவதும் கழுதைகள் தான். அந்த மாநிலத்தின் ஜெய்ப்பூர் நகரில் 500 ஆண்டுகால பழமையான கழுதைகள் சந்தை இன்றளவும் நடந்து வருகிறது. மூட்டைகளை சுமந்து செல்லவும் ராஜஸ்தானில் அதிகம் உள்ள செங்கல் சூளைகளில் பணியாற்றவும் அதிகப்படியான கழுதைகள் பணியமர்த்தப்படுகின்றன.
ராஜஸ்தானில் உள்ள ஹனுமன்நகர் என்னும் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தினர் தங்களது கிராமத்தில் தொடர்ச்சியாக பல கழுதைகள் காணமல் போய்க் கொண்டு இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். முதலில் ஒரு சிலர் வந்து கழுதைகள் காணவில்லை எனப் புகார் அளித்ததால் போலீஸார் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
பின்னர் ஒரு கிராமமே திரண்டு வந்து அளித்த புகாரில் சுமார் 70-க்கும் அதிகமான கழுதைகள் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கழுதைகளைத் தேடும் வேளையில் போலீஸார் இறங்கினார். ஒரு கழுதைக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் சுமார் 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கழுதைகளைக் காணவில்லை என்று அந்த கிராமத்தினர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு புலம்பி உள்ளனர்.
இதனால் தொலைந்ததைக் கண்டுபிடித்ததாக போலீஸார் ஒரு 15 கழுதைகளை மீட்டுக் கொண்டு வந்துள்ளனர். ஆனால், அந்த 15 கழுதைகளையும் வரிசையாக நிற்க வைத்து ஒவ்வொருவரும் தங்களது கழுதையின் பெயரைச் சொல்லி 'பிங்கூ, பப்லு...' என்றெல்லாம் அழைத்துள்ளனர். ஆனால், ஒரு கழுதை கூட அந்த செல்லப் பெயர்களைக் கேட்டு நகரவில்லை.
இதனால் அந்த கழுதைகளை தங்களுடையதாக ஏற்க அந்த கிராமத்தின் கழுதை உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர். தங்கள் செல்லப் பெயர்கள் கொண்ட கழுதைகள் வந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என ஒரு கிராமமே போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கு பணியாற்றும் காவல்துறையினர் மிகுந்த மன வேதனையுடன் கழுதைகள் தேடலில் ஈடுபட்டுள்ளார்களாம்.
இதற்காக ஒரு சிறப்புத் தனிப்படையும் ராஜஸ்தான் போலீஸாரால் நியமிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மற்ற செய்திகள்
