'காலம்காலமா நம்ம முன்னோர்கள் பண்ணிட்டு இருந்ததுதான்...' 'நச்சு கிருமிகள் எதுவும் வீட்டுக்குள்ள வராம இருக்க தெளிக்கிறோம்...' மஞ்சள் நீரை வாசலில் தெளிக்கும் கிராமத்து பெண்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸை தடுக்க வீடுகளிலும் பொது இடங்களிலும் மஞ்சள் தெளித்து கோலமிடும் மக்களின் புகைப்படங்கள் இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.

உலக மக்களை அனைவரையும் எந்தவித பாகுபாடும் இன்றி வீட்டுக்குள் சிறைப்பட வைத்துள்ளது கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ். இதுவரை 3,08,227 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 13,064 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸிற்கு மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில் உலக அரசுகள் அனைத்தும் மக்களை தனிமைப்படுத்தி கொள்ளவும், மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும் பல விழிப்புணர்வுகளை அளித்து வருகிறது.
இந்தியாவில் இதுவரை 332 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி ஆகியுள்ள நிலையில் இந்த வைரஸ் தொற்றால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொதுமக்களும் ஒரு சில இடங்களில் தாமாக முன்வந்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில்வே நிலையம், பேருந்து நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை தவிர்க்க, பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் ஒருபகுதியாக, கிராமத்துப் பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த நீரை தெளிக்கின்றனர்.
அதையடுத்து தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதியிலும் பெண்கள் தங்கள் வீட்டின் முன்பு மஞ்சள் கலந்த தண்ணீரை தெளித்து வருகின்றனர். மேலும் மஞ்சள் ஒரு கிருமி நாசினி. தற்போது கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் மஞ்சள் கலந்த நீரை தெளிப்பதால் சிறுசிறு நச்சுப் பூச்சிகள், ஈக்கள், கிருமிகள் வீட்டுக்குள் நுழையாது. இது நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த பழக்கவழக்கங்களில் ஒன்று தற்போது தமிழகத்தில் பரவி வரும் கொரோனா அச்சத்தால் இந்த நடைமுறைகளை கடைபிடிக்கிறோம். இதன்மூலம் நோய்த்தொற்று பரவாது என்று அவர்கள் தெரிவித்தனர்
அதுமட்டுமில்லாமல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் மையங்களுக்கு பலர் வந்துசெல்வதால், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து ஏடிஎம் மையங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நடைபெறும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ஆட்சியர் பொன்னையா ஆய்வு செய்து வருகிறார்.
