‘அவனுக்கு கொரோனா வந்துருச்சு’... ‘சக ஊழியர்கள் அனுப்பிய வீடியோவால்’... 'இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 21, 2020 02:23 PM

புதுக்கோட்டையில் கொரோனா தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டதாக வாட்ஸப்பில் வதந்தி பரப்பிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

2 Co-Employees were arrested for Coronavirus Gossip

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை லஞ்சமேட்டைச் சேர்ந்த ராமன் என்பவரின் மகன் அழகர்சாமி (28). விராலிமலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சப்ளையராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 17-ம்தேதி மாலை லஞ்சமேடு பஸ் ஸ்டாப் அருகே நின்றுகொண்டிருந்தபோது, முத்துக்குமார் என்பவர் அழகர்சாமியிடம் ‘நீ கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மணப்பாறை மருத்துவமனையில் இருப்பதாக, உன் கம்பெனியில் வேலை பார்க்கும் ஐயப்பன் (26) என்பவர், நேதாஜி நண்பர் குழு என்ற வாட்ஸப் குரூப்பில் வீடியோ வெளியிட்டிருப்பதாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த முத்துகுமார், முத்துக்குமாரின் செல்ஃபோனை வாங்கி பார்த்தபோது, அதில் அவரது புகைப்படத்துடன் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதுபோல வீடியோ இருப்பதைக்கண்டு அதிர்ந்து போனார். இதுகுறித்து ஐயப்பனிடம் அவர் கேட்டபோது, நம் கம்பெனியில் வேலை பார்க்கும் அகரப்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார்(21) என்பவர் தான் எனக்கு அனுப்பியதாகவும், அதைத்தான் நான் வாட்ஸப் குழுவில் போட்டதாகவும் கூறியுள்ளார். இதனைக்கேட்டு உறைந்துப் போன அழகர்சாமி, விராலிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார், ஐயப்பன், ராஜ்குமார் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதுபற்றி போலீசார் கூறும்போது, ``கொரோனாவின்  தீவிரம் தெரியாமல் பலரும் இதுபோன்ற வீண் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை மற்றும் அரசு சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வைரஸ் பரவலைத் தடுக்க இதுபோன்ற வீண் வதந்திகள் பரப்புவதைத் தவிர்த்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்று  கூறுகின்றனர்.

Tags : #GOSSIP #CORONAVIRUS