மதுரை: சிறை கைதிகளுக்கு நடிகர் விஜய் சேதுபதி வழங்கிய நன்கொடை.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை சிறை நூலகத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி 1000 புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.
விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி முன்னணி திரைப்பட நடிகராக தமிழில் வலம் வருவதுடன், தென்னிந்திய மற்றும் இந்தி மொழியிலும் படங்களில் நடிக்கிறார். தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்ட விஜய் சேதுபதி கடந்த 2004 ம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி, 2010 ல் சீனு இராமசாமி இயக்கத்திலான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
அதன் பிறகு 2012 ல் சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பாலாஜி தரணிதரன் ஆகியோரின் இயக்கத்திலான முறையே பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்களில் நல்ல வரவேற்பை அடுத்து நானும் ரவுடிதான், சேதுபதி, விக்ரம் வேதா, தர்மதுரை, கவண், 96, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆரஞ்சு மிட்டாய், முகில் உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்தார். அண்மையில் விக்ரம் திரைப்படத்தில் சந்தனமாக அனைவரையும் மிரட்டியிருந்தார் விஜய் சேதுபதி.
Images are subject to © copyright to their respective owners.
சிறை நூலகம்
சென்னை புழல் மத்திய சிறையைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையிலும் கைதிகள் பயன்பெறும் வகையில், சிறப்பு நூலகத் திட்டம் சில மாத்திற்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து சமூக ஆர்வலர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் சிறை நூலகங்களுக்கு பல்வேறு புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கி வருகின்றனர். இதுவரை மத்திய சிறை நூலகத்திற்கென 15 ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் சேகரிக்கப்பட்டுள்ளன. சிறை கைதிகளுக்கு உதவும் வகையிலும் அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பேசியுள்ள விஜய் சேதுபதி சிறை கைதிகளை நல்வழிப்படுத்தும் இந்த முயற்சியை பாராட்டுவதாகவும் இலக்கியம், கிராமத்து பின்னணி, கைதிகளை நல்வழிப்படுத்தும் போதனை உள்ளிட்ட 1000 புத்தகங்களை முதற்கட்டமாக வழங்குவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், சிறை துறையின் இந்த திட்டம் வெற்றிபெற வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
