ஜெயில் கைதியாக வாழ ஆட்கள் தேவை.. கம்பி எண்ண யாரெல்லாம் ரெடி? அப்ளை பண்ணுங்க.. சிறைச்சாலை வெளியிட்ட தகவல்
முகப்பு > செய்திகள் > உலகம்சுவிட்சர்லாந்த்: சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்படும் புது சிறைச்சாலைக்கு சில நாட்கள் கைதியாக வாழ ஆட்கள் தேவை என செய்தி வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரத்தில் ஒரு புதிய 'Gefaegnis Zurich West' சிறைச்சாலை கட்டப்பட்டுள்ளது. அந்த சிறைச்சாலையை சோதனை செய்வதற்காக கைதிகளாக வாழ தன்னார்வலர்கள் தேவை என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதோடு, இந்த சோதனை முறை நான்கு நாட்களாக மார்ச் 24 முதல் 27-ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
832 விண்ணப்பங்கள்:
இந்த சிறைச்சாலைக்கு எத்தனை பேர் வேண்டும் என அதிகாரிகள் அறிவிப்பதற்கு முன்பாவே, சுமார் 832 விண்ணப்பங்களைப் பெற்றதாக சூரிச் திருத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது சோதனை ஓட்டமாக இருந்தாலும், இந்த சிறைச்சாலையில் தங்க சில விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள் உள்ளது.
சுவிட்சர்லாந்தின் பிரதான ரயில் நிலையத்திற்கு மேற்கே அமைந்துள்ள இந்த சிறைச்சாலை, தற்காலிகக் காவலில் உள்ள 124 பேர் வரை தங்கவைக்கலாம் எனவும், விசாரணைக்கு முந்தைய தடுப்புக் காவலில் உள்ள தனிநபர்களுக்கு 117 இடங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தன்னார்வத் தொண்டர்கள் உள்நாட்டில் வசிக்க வேண்டும்:
Zurich West Prison-க்குள் நுழைய விரும்புகிறவர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். அதோடு, விசாரணைக்கு முந்தைய தடுப்புக்காவல் மற்றும் சிறை சேவைகளை சோதிக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் உள்நாட்டில் வசிக்க வேண்டும்.
சிறையில் தங்க தன்னார்வலர்கள் பணம் செலுத்தவோ அல்லது பணம் பெறவோ வேண்டியதில்லை. அதோடு அவர்கள் கைதிகளைப் போல நடத்தப்படுவார்கள். ஆடை, உணவைச் சோதித்தல், உட்கொள்ளும் நடைமுறைகளுக்கு உட்படுத்துதல், முற்றத்தில் நடப்பது போன்றவை என அதில் எல்லாமே நடக்கும்.
மின்னணு சாதனங்கள் ஜெயிலுக்குள் அனுமதி இல்லை:
மேலும், தன்னார்வலர்கள் செல்போன் அல்லது பிற மின்னணு சாதனங்களை உள்ளே கொண்டு வர முடியாது. கூடுதலாக நுழையும்போது உடலில் ஏதேனும் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா (Strip-searches) என சோதனை செய்யப்படுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக அவர்கள் தங்கும் நாட்களில் இடையில் ஏதேனும் தவறு நடந்தால் குறிப்பிட்ட நபர் இந்த சோதனையிலிருந்து வெளியேற்றப்படுவார். சோதனை ஓட்டத்தில், சிறையின் திறன், சேவைகள் மற்றும் செயல்பாடுகளை சரிபார்ப்பதற்கும், காவல்துறை மற்றும் வழக்குரைஞர்கள் போன்ற பிற அதிகாரிகளுடன் அவர்களின் ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்வதற்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உதவும் என சிறை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
