'நைட் 11.30 மணி இருக்கும், அசந்து தூங்கிட்டு இருந்தேன்'... 'என் கைய பின்னாடி கட்டி'... விடிஞ்சதும் பாட்டி வீட்டிலிருந்து போலீஸ் ஸ்டேஷன் ஓடி வந்த சிறுமி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த சில நாட்களாகப் பள்ளிக்குச் செல்லும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது என்பது தொடர்கதையாகி வருகிறது. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது வேலூரில் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் காவல் நிலையத்திற்கு ஓடி வந்து புகார் ஒன்றை அளித்துள்ளார். சிறுமியின் புகாரைக் கேட்ட காவல்துறையினர் அதிர்ந்து போனார்கள். இது குறித்து சிறுமி காவல் நிலையத்தில் தெரிவிக்கும் போது, ''நேற்று இரவு என் பாட்டி வீட்டில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென எனது கையை பின்னாடி வலுக்கட்டாயமாகக் கட்டினார்கள். அப்போது இரவு சுமார் 11.30 இருக்கும். உடனே எனது கழுத்தில் தாலி கட்டி விட்டனர்.
இதையடுத்து விடிந்த பிறகு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வந்துவிட்டேன். ஆனால் எங்குச் சென்று புகார் அளிப்பது என எனக்குத் தெரியவில்லை. அப்போது தான் ஒருமுறை பள்ளியிலிருந்து விருத்தம்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார்கள். இதனால் அங்குப் புகார் அளிக்கலாம் என போலீஸ் ஸ்டேஷன் வந்தேன்'' என அந்த சிறுமி கூறினார். இதையடுத்து சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் அளித்தார்கள்.
அதன்பேரில் ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் சிறுமியைப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கருதி காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.இதற்கிடையே வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி, கர்ணாம்பட்டுப் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவைச் சேர்ந்த 17 வயது மாணவி, சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி ஆகிய 4 சிறுமிகளுக்கு நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை ரகசியத் தகவலின் படி வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
சிறுமிகளுக்குக் குழந்தை திருமணத்தை நடத்த முயன்ற பெற்றோரிடம் சமூக நலத்துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே நடு இரவில் பாட்டி வீட்டில் சிறுமிக்குத் திருமணம் செய்து வைக்க முயன்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.