‘சினிமா க்ளைமேக்ஸை’ மிஞ்சும் ‘திக்..திக் நிமிடங்கள்!’.. விகாஸ் துபே ‘என்கவுண்டர்!’ நடந்தது எப்படி?.. சர்ச்சையைக் கிளப்பும் கேள்விகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகான்பூரில் ஜூன் 2-ஆம் தேதி நள்ளிரவில் ரவுடி விகாஸ் துபேவை பிடிக்கச் சென்ற போலீஸாரில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து உ.பியின் முக்கியக் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்ற இவரின், தலைக்கு ரூ.25 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
அதன் பிறகு விகாஸ் துபேவின் வலது கை உட்பட, அவரது 3 சகாக்கள் போலீஸாரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் பயம் கொண்டதாகக் கருதப்படும் விகாஸ், இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் வைத்து நேற்று அந்த மாநில போலீசார் விகாஸ் துபேயை அதிரடியாக கைது செய்தனர். இங்குள்ள உஜ்ஜைனின் பழம்பெரும் மஹாகாலபைரவர் கோயிலில் தரிசனம் முடித்த விகாஸ் காலை 8.00 மணிக்கு கைது செய்யப்பட்டார். பின்னர் 10 மணி நேரம் போலீஸாரின் கட்டுப்பாட்டில் விசாரிக்கப்பட்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அங்கிருந்து உத்திரப்பிரதேசம் போலீஸார் மூலமாக, மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட விகாஸ் துபே, இன்று காலை கான்பூருக்கு அழைத்து வரப்பட்டபோது, அந்த வாகனம் சாலையில் தடுமாறி கவிழ, அப்போது போலீஸாரிடம் துப்பாக்கியை பிடுங்கி சில போலீஸாரை சுட்டுவிட்டு விகாஸ் தப்ப முயல, உடனே உ.பியின் அதிரடி படையினரால் விகாஸ் துபே என்கவுண்டர் செய்யப்பட்டார்.
காலை 7.15 மணி அளவில் கொட்டும் மழையில் நடந்த இந்த பரபரக்கும் சம்பவத்தில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்த விகாஸ், கான்பூரின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் விகாஸின் உயிர் பிரிந்ததை உறுதிப்படுத்தினர். எனினும் விகாஸ் துபே கோயிலுக்குள் சென்று “முடிந்தால் என்னை சுட்டுக் கொல்லுங்கள். கைது செய்யுங்கள்” என கூச்சலிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் கோயிலுக்குள் திட்டமிட்டு சரணடையச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
அவ்வளவு பெரிய டான் இப்படி கோயிலுக்குள் சென்று பிட்பாக்கெட் திருடனை போல் பிடிபடுவாரா? என்றும், போலீஸாரின் துப்பாக்கியை எடுத்து அவர்களை சுட்டுவிட்டு தப்பிச் செல்லும் அளவுக்கு போலீஸார் எச்சரிக்கை இல்லாமல் இருந்தார்களா? அப்படி இருப்பதற்கு விகாஸ் துபே என்ன பெட்டி கேஸில் கைது செய்யப்பட்டாரா? என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதனிடையே விகாஸ் கான்பூருக்கு போய் சேர்ந்துவிடுவாரா? என போலீஸார் ஒருவர் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளதால், விகாஸின் என்கவுண்டரின் பின்னணியில் இருக்கும் அரசியல்களாலோ, அல்லது அரசியல் அழுத்தங்களாலோ அவர் சுட்டுக்கொல்லப்பட்டாரா என்கிற கோணத்திலும் பலதரப்பட்ட சர்ச்சைக் கேள்விகளும், வாதங்களும் எழுந்துள்ளன.