'#கமல்60': திரையில் இருந்தே 'அரசியலும் சமூகமும் உலகநாயகனின் இரண்டு கண்கள்'.. 'ஹேப்பி பர்த்டே கமல்ஹாசன்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 07, 2019 11:55 AM

குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமாகி 200க்கும் மேற்பட்ட இந்திய துணைக்கண்ட மொழித் திரைப்படங்களில் நடித்து மக்கள் நாயகன், உலகநாயகன் உள்ளிட்ட அநேக கவுர அடையாளங்களுடன் திகழும் நடிகர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் தனது 66 ஆவது வயதிலும் (கமலின் பிறந்த நாள் நவம்பர் 07, 1954), தனது திரைக்கலையின் 60 ஆவது வயதிலும் அடியெடுத்து இன்று (நவம்பர் 07,2019) வைக்கிறார்.

Ulaganayagan Padmasri Kamalhassan special Birthday tribute

தென்னிந்திய திரை மாடத்தில் கே.பாலச்சந்தர் ஏற்றிவைத்த இரண்டு தீபங்களாக ரஜினிகாந்த் , கமல்ஹாசன் இருவரையும் சொல்லலாம். இருவரின் நட்பும் திரையுலகம் அறிந்ததே. ஒருமுறை கலைத்தாய் எங்களை எல்லாம் கைப்பிடித்து கூட்டிச் செல்கிறாள். ஆனால் கமலை இடுப்பில் தூக்கிவைத்துக்கொண்டு செல்கிறாள் - என்று ஒரு விழா மேடையில் கமல்ஹாசனை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தார்.

கமலின் படங்களில் அன்பு, அறிவு, கருத்து, காமெடி, ஆத்திக-நாத்திக - தேசிய - திராவிட அரசியல், வரலாறு என அனைத்தும் படங்களுக்குத் தகுந்தாற்போல் பவனி வருவன. சாதி பேதங்களை தேவர் மகன் போன்ற படங்களிலும், மத பேதங்களை ஹேராம் போன்ற படங்களிலும் இன பேதங்களை இந்தியன் போன்ற படங்களிலும் , மொழி பேதங்களை நளதமயந்தி (கமலின் திரைக்கதை), மரோசரித்ரா போன்ற படங்களிலும், சமய பேதங்களை தசாவதாரம் போன்ற படங்களிலும், ஆத்திக-நாத்திக முரண் பேதங்களை அன்பே சிவம் போன்ற படங்களிலும், சமூக பேதங்களை வறுமையின் நிறம் சிவப்பு, உன்னால் முடியும் தம்பி போன்ற படங்களிலும், சமூக விரோத இயக்கங்களின் மீதான விமர்சனங்களை குருதிப்புனல், விஸ்வரூபம் போன்ற படங்களிலும் கமல் கூறியிருப்பார்.

`தேவர்மகன்' படத்தில் 'போற்றிப் பாடடி பெண்ணே' என்கிற நிலவுடைமையைப் பெருமைப்படுத்தும் பாடல் வைக்கப்பட்டு, ஆனால் இறுதி வசனம் ஒன்றில் கல்வியே ஆயுதம் என கூறியது;  பாபர் மசூதி இடிப்பையொட்டிய கலவரங்கள் இந்தியா முழுவதும் நிகழ்ந்த போது, அமைதியாக இருந்த தமிழ்நாட்டிலும் கலவரங்கள் நிகழ்ந்ததாக `ஹே ராம்' திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்ட காட்சிகள்; தீவிரவாதி என்கிற சந்தேகம் எழுந்தாலே, சுட்டுவிட வேண்டும் என்கிற `உன்னைப் போல் ஒருவன்'  வசனம் உள்ளிட்ட பலவும் விமர்சனங்களுக்கு உள்ளானாலும் கமலின் நோக்கமோ,  'ஏழ்மைப்பட்டவர்களின் வாழ்வில் நிகழும் கொடுமைகளுக்கு அன்போடு சிந்தும் ஒரு துளி கண்ணீரே ஒருவரை மனிதராக மாற்றும்' என்கிற ரீதியிலேயே அடுத்தடுத்த படங்களை இயக்குவதாய் இருந்தது.

மேலும் கமலின் சித்தாந்தம் பற்றிய சர்ச்சைக் கருத்துக்கள் அவ்வப்போது எழுகின்றன. ஆனால் அண்மையில் விகடன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கமல் அதற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.  இந்தி உள்ளிட்ட எந்த மொழி மீதும் தனக்கு வெறுப்பு கிடையாது என்றும் புரியாமலேயே கூட நாம் வங்கமொழியில் தேசிய கீதம் பாடுகிறோம். ஆக அந்த புரிதலை பறிக்க முடியாது என்று விளக்கியிருந்தார். ஆரியர்-திராவிட-தமிழர்-இந்தியர் பற்றிய கருத்தினைச் சொன்ன கமல், எல்லாம் கலந்த கலவைதான் இந்த நாடு என்றும், கீழடி நாகரிகத்தின் மூலம் தொன்மையான சமூகத்தில் படித்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு அந்த நாகரிகம் தமிழருடையதா? திராவிடருடையதா? ஆரியருடையதா? யாருடையது? என்கிற ஆய்வுகள் தேவையில்லை என்றும், அதே சமயத்தில் திராவிடம் என்கிற இனக்குறிப்பு இந்தியா முழுவதும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்றும் கமல் குறிப்பிட்டிருந்தார்.

இப்படி திரைப்படங்களிலேயே தன்னுடைய சமூகம், அரசியல், மக்கள் என பேசத் தொடங்கிவிட்ட கமல், கடந்த 2017-ஆம் தேதி நவம்பர் 7-ஆம் நாள் (கமலின் பிறந்த நாள்) மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ அரசியல் பிரகடனத்தை அறிவித்துத் தொடங்கினார். அதுதான் இந்த கலைத்தாய் மகனின் அடுத்த அக்னிப் பிரவேசமாகவும் ஒளிரத் தொடங்கியது. இன்றுவரை ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறது.

Tags : #KAMALHAASAN #HAPPYBIRTHDAYKAMALHAASAN #HBDKAMALHAASAN #KAMAL60 #ULAGANAYAGAN