‘பழைய கொள்ளையர் கட்சிகளையும் அதன் கூட்டுப் பங்காளிகளையும்’..‘இந்த ஊழல் நாடகத்தில்’.. பரபரப்பை கிளப்பும் மநீம தேர்தல் நிலைப்பாட்டு அறிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Sep 22, 2019 12:09 PM
டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தபோது மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படவிருப்பதாக கூறியிருந்தார்.

இதேபோல் தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரியில் காமராஜர் நகர் உள்ளிட்ட இடங்கள் உட்பட இந்தியா முழுவதும் காலியாக இருக்கும் 64 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து அக்டோபர் 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நிகழும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் தமிழகத்தைப் பொறுத்தவரை நாங்குநேரி, விக்கிரவாண்டி உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் திமுக போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடப் போவதில்லை என்கிற நிலைப்பாட்டை தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் போட்டியிட போவதில்லை என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இதுபற்றி வெளியான மநீம கட்சியின் அறிக்கையில், ‘பழைய கொள்ளையர் கட்சிகளையும், அதன் கூட்டு பங்காளிகளையும், பெருவாரி மக்களின் எண்ணப்படி ஆட்சியில் இருந்து அகற்றி, 2021ல், ஆட்சி பொறுப்பினை மக்களின் பேராதரவுடன் கைப்பற்றி, மக்களாட்சிக்கு வழிவகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மையம் கட்சி விரைவாக முன்னேறி வருகிறது. நாங்குநேரியிலும், விக்கிரவாண்டியிலும் தங்கள் தலைவர்களையும், அவர்களின் தலைப்பாகைகளையுமாவது தக்க வைத்து கொள்ளலாம் என்கின்ற எண்ணத்துடன் ஆட்சியில் இருந்தவர்களும், ஆள்பவர்களும் போடும் இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மையம் பங்கெடுக்காது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Makkal Needhi Maiam party's Press Release on Nanguneri and Vikravandi By-Elections.#MakkalNeedhiMaiam pic.twitter.com/LqsL7xkvZu
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) September 22, 2019
