'தமிழக வரலாற்றில் முதல் முறை'... 'நாளை வாக்கு எண்ணிக்கையில் முக்கிய நிகழ்வு'... எதிர்பார்ப்பில் மொத்த தமிழகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சர் யார் என்ற கேள்விக்கு நாளை விடை கிடைத்து விடும். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடந்தது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாகத் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. சென்னையில் 16 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ராணி மேரி, லயோலா, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக அதிகபட்சமாக 4 மேஜைகள் போடப்படுகின்றன. ஒரு மேஜையில் 500 தபால் வாக்குகள் வரை எண்ண ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மின்னணு வாக்குகள் 14 மேஜைகள் போடப்பட்டு எண்ணப்படும்.
ஒரு மேஜைக்கு ஒரு நுண் பார்வையாளர் வீதம் இருப்பார்கள். சென்னையில் மட்டும் ஆயிரத்து 248 ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள். இதற்கிடையே நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுவது, தமிழக அரசியல் வரலாற்றில், மக்கள் செல்வாக்குமிக்க தலைவர்களாக விளங்கிய கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரும் இல்லாமல் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை தான்.
இதனால் இந்த தேர்தல் முடிவுகள் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.