'அம்மா வீடு 4 நாளா திறக்கவே இல்ல'... 'மகள் கதவை உடைத்து பார்த்தபோது... 'அதிர்ச்சியில் ஆடிப்போன ஊர்மக்கள்!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை ஒருவர் கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த தேவாங்கபுரம் கிராமத்தில் ராஜேஸ்வரி என்பவர் தனியாக வசித்து வந்துள்ளார். அவருடைய கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்ட நிலையில், அவருடைய ஒரே மகள் கோமதிக்கும் திருமணம் ஆகிவிட்டதால் தனியாக வசித்துவந்த ராஜேஸ்வரி கிராம மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளி அன்று அவருடைய வீடு 4 நாட்களுக்கும் மேலாக பூட்டி கிடந்தால் அக்கம் பக்கத்தினர் அவருடைய மகள் கோமதிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் கோமதியும் அங்கு வர உள்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த காட்சி அனைவரையும் ஒரு கணம் ஆடிப்போகச் செய்துள்ளது.
வீட்டினுள் சமையல் அறையில் மூதாட்டி ராஜேஸ்வரியின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடக்க, அதைப் பார்த்து மகள் கோமதி கதறி அழுதுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மோப்பநாய் உதவியுடன் அப்பகுதியில் தடயவியல் சோதனை நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய போலீசார் ராஜேஸ்வரியிடம் கடன் பெற்றவர்களின் பட்டியலை சந்தேகத்தின் பேரில் சேகரித்து விசாரித்த போது, அதில் அதே கிராமத்தை சேர்ந்த நெசவுத் தொழிலாளியான கணேசன் என்பவர் மட்டும் தலைமறைவாகி இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து சென்னையில் இருந்த கணேசனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்ததில் பல அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணையில், மூதாட்டி ராஜேஸ்வரியிடம் கடனாக பெற்ற 10,000 ரூபாய்க்கு வட்டி கூட கட்டமுடியாமல் சிரமப்பட்ட சூழலில் வீட்டிற்கே வந்து குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் ராஜேஸ்வரி திட்டி அவமானப்படுத்தியதாகவும், அதனால் ஆத்திரமடைந்து அவருடைய வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அங்கிருந்த இரும்பு கம்பியால் தாக்கியதில் மயங்கி விழுந்து அவர் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார். பின்னர் பெட்ரோல் வாங்கி வந்து அவருடைய உடலை எரித்து விட்டு, அவருடைய நகையை அடமானம் வைத்த தொகையில் சென்னைக்கு சென்று விட்டதாகவும் விசாரணையில் கணேசன் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர்மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.