'பாக்குறதுக்கு அப்பாவி போல இருக்கிறாரே, இவரா...?' 'பகல்ல தோசை மாஸ்டர்...' குரங்கு குல்லாவினால் வசமாக சிக்கிய டாஸ்மாக் திருடர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த 7 ஆண்டுகளாக கொள்ளையடித்து கோடீஸ்வரனான குபேரனை சென்னை மயிலாப்பூர் உதவி கமிஷனர் நெல்சனின் தனிப்படை போலீசார் முதல் தடவையாக கைது செய்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூர், ஆர்.கே. மடம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து மயிலாப்பூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்செய் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸார் கொள்ளை நடந்த டாஸ்மாக் கடைக்குச் சென்று விசாரித்தனர். அப்போது டாஸ்மாக் கடையின் சுவரில் துளையும் கதவின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. மேலும், டாஸ்மாக் கடையின் பணப்பெட்டி லாக் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போயிருந்தது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது குரங்கு குல்லா அணிந்தபடி கொள்ளையன் கடையிலிருந்து வெளியில் வரும் காட்சி பதிவாகியிருந்தது. பின்னர் அவர், கடையிலிருந்து மயிலாப்பூர் குளக்கரை பஸ் நிறுத்தத்துக்குச் செல்லும் காட்சிகளும் அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்தன.
இதையடுத்து, பஸ் நிறுத்தத்திலிருந்து கொள்ளையன், பஸ்சில் ஏறி சென்னை சென்ட்ரலுக்கு செல்வதை சிசிடிவி உதவி மூலம் போலீசார் கண்டறிந்தனர். அதனால் தனிப்படை போலீஸாரும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சென்னை புறநகர் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் மின்சார ரயிலில் செல்வதை போலீசார் உறுதிப்படுத்தினர்.
அதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் வழிதடத்தில் உள்ள ஒவ்வொரு ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இறங்கிய கொள்ளையன் அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் பயணித்தார். அந்த ஆட்டோ செல்லும் வழித்தடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆட்டோவிலிருந்து இறங்கிய கொள்ளையன், திருவள்ளூர் தேரடி வீதியில் உள்ள திரையரங்கின் பின்பகுதியில் இருக்கும் வீட்டுக்கு நடந்து செல்வதையும் போலீசார் கண்டறிந்தனர். அந்த வீட்டுக்குச் சென்றபோது கதவு பூட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீஸார், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தனர். அப்போது, இந்த வீட்டில் தனியாக வேலூரைச் சேர்ந்த ஒருவர் தங்கியிருந்து சமையல் வேலை செய்துவருகிறார். ஆனால் அவரின் பெயர், வேலூர் முகவரி தெரியாது என்று தெரிவித்தனர். இதனால் போலீசார் வேலூருக்குச் சென்றனர். வேலூரில் முக்கிய இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, மயிலாப்பூர் டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த நபர், அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் தோசை மாஸ்டராக இருப்பதைக் கண்டறிந்தனர். கிழிந்த சட்டை அணிந்திருந்த அந்த நபர், பார்ப்பதற்கு அப்பாவி போல இருந்தார். அதனால் அந்த நபரா கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டார் என்ற சந்தேகம் போலீஸாருக்கு முதலில் எழுந்தது.
இருப்பினும் அங்கு சென்று தோசை மாஸ்டரிடம் டாஸ்மாக் கொள்ளைக் குறித்து விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் குபேரன் என்கிற சிவா (42), வேலூர், கருகம்பத்தூர், முத்தம்மாள் தெருவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. மயிலாப்பூர் டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்ததை குபேரன் ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர் அளித்த தகவலின்படி 13,40,000 ரூபாயை போலீஸார் மீட்டனர். குபேரன் குறித்து விசாரித்தபோது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. கடந்த 7 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளில் மட்டுமே கொள்ளையடித்த குபேரன், பெயருக்கு ஏற்ப கோடீஸ்வரனாக வேலூரில் வாழ்ந்து வந்ததைக் கண்டறிந்துள்ளனர். போலீஸாரிடம் சிக்காமல் இருக்க கொள்ளையடிக்கும்போது குபேரன் செல்போனை பயன்படுத்தாமல் அதை சுவிட்ச் ஆப் செய்துவிடுவார். அதனால்தான் அவர் காவல்துறையினரிடம் சிக்காமல் இருந்துவந்துள்ளார்.
