'அத்தியாவசிய பொருட்களுக்கு பாதிப்பு இருக்காது'... 'தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு'... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிகரித்துக் கொண்டே சென்றதால், கடந்த மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் வெளியே சுற்றிக் கொண்டே திரிந்ததால் கொரோனா தொற்று குறையவில்லை.
இதனால் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு மே 24-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்ததே தவிர முற்றிலுமாக நின்றதாகத் தெரியவில்லை. சென்னையில் பாதிப்பு ஓரளவு குறைந்தாலும் கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்று அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
ஊரடங்கினை நீட்டிப்பது குறித்தும், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதில், மக்கள் நல்வாழ்வு, வருவாய், காவல்துறை மற்றும் பொதுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அதிகாரிகள் இதே முழு ஊரடங்கை மேலும் ஒரு வார காலம் நீட்டிக்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
இதையடுத்து தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொது மக்கள் நலன் கருதி, 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும்.
மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7-00 மணி முதல் மாலை 6-00 மணிவரை அனுமதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#TNLockdown | மே 31 வரை அறிவிக்கப்பட்டிருந்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு : மளிகை பொருட்கள் தள்ளு வண்டியில் விற்கப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.#TNExtends #lockdown for one more week.. pic.twitter.com/kjfGF7jHXw
— Johnson PRO (@johnsoncinepro) May 28, 2021