'சில பேர் பண்ற தப்பு'... 'நான் உங்க கிட்ட கேக்குறது இது மட்டும் தான்'... முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா நோய்த்தொற்றிலிருந்து நம்மைக் காக்கவும், மீட்கவும் உள்ள மிக மிக முக்கியமான கவசம் தடுப்பூசி தான்.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தைச் சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாகப் போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்தும் வீடியோ வாயிலாகப் பேசியுள்ளார்.
அதில், கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் அனைவரும் மிகுந்த பாதுகாப்போடும் எச்சரிக்கையோடும் இருங்கள். முடிந்த அளவு வீட்டிற்குள்ளேயே இருங்கள். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் சென்றாலும் தனி மனித இடைவெளியை கடைப்பிடியுங்கள். மேலும் முகக்கவசம் அணியுங்கள், முகக்கவசத்தை மூக்கு, வாய் மூடி உள்ளபடி முழுமையாக பயன்படுத்துங்கள்.
அதேபோன்று மருத்துவமனை, பேருந்து பயணம், கடைகளுக்குச் செல்லும்போது, தொழிற்சாலை மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும்போது இரண்டு முகக்கவசம் பயன்படுத்துங்கள். கிருமி நாசினியை அடிக்கடி பயன்படுத்துங்கள். இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். நோய்த்தொற்றிலிருந்து நம்மைக் காக்கவும், மீட்கவும் உள்ள மிக மிக முக்கியமான கவசம் தடுப்பூசி தான்.
சிலருக்குத் தடுப்பூசி போட்டுக்கொண்டால் காய்ச்சல், உடல் வலி வரலாம். அதுவும் ஒரே நாளில் சரியாகி விடும். தடுப்பூசி போடுவதை ஒரு இயக்கமாகத் தமிழக அரசு நடத்தி வருகிறது. முகக்கவசம், கிருமிநாசினி பயன்படுத்துவது, தடுப்பூசி போட்டுக்கொள்வது மூன்றின் மூலமாகவும் கொரோனா தொற்றிலிருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் காத்துக்கொள்ளலாம். வரும் முன் காப்போம். கொரோனா இல்லாத தமிழகம் அமைப்போம். என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முகக்கவசம் அணியுங்கள்!
— M.K.Stalin (@mkstalin) May 19, 2021
கிருமிநாசினியைப் பயன்படுத்துங்கள்!
தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்!
நம்மையும் காத்து,
நாட்டு மக்களையும் காப்போம்! pic.twitter.com/bPcBrg1Q8E

மற்ற செய்திகள்
