BREAKING: தமிழகத்தில் ஒரு வாரம் 'தளர்வுகளற்ற' முழு ஊரடங்கு...! 'தமிழக அரசு அறிவிப்பு...' - முழு விவரங்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மேலும் ஊரடங்கை தீவிரப்படுத்த மருத்துவ குழு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று (21-05-2021) செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின், இன்று (22-05-2021) ஊரடங்கை குறித்து அறிவிப்பை வெளியிடுவேன் எனக் கூறியிருந்தார்.
அதன் பெயரில் மீண்டும் மருத்துவ குழு மற்றும் கொரோனா தடுப்பு குழு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி மற்றும் மக்களின் நலன் கருதியும் ஒரு சில முடிவுகளை அரசு வெளியிடவுள்ளாதக அறிவித்தது.
அதன்படி வரும் மே 24-ஆம் தேதி முதல் தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த முழு ஊரடங்கு காலத்தில் கீழ்க்கண்ட செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
- மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள்
- பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம்
- பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்
- தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும், அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும்
- தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- மின்னணு சேவை (நு-உடிஅஅநசஉந) காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை இயங்கலாம்.
- உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
- Swiggy, Zomato போன்ற மின் வணிகம் ((e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்
- பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும்
- ஏ.டி.எம். மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.
- வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்
- சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.
- உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்
- மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.
- செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.
- தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படும்.
- பொது மக்கள் நலன் கருதி, இன்று (22-5-2021) இரவு 9-00 மணிவரையிலும், நாளை 23.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.
- · மால்கள் திறந்திட அனுமதி கிடையாது.
- · வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்று (22.05.2021) மற்றும் நாளை (23.05.2021) தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.
கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும். மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்'. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

மற்ற செய்திகள்
