நூறு நாள் வேலை பாத்துக்கிட்டே குரூப் 2 தேர்வில் சாதிச்ச 55 வயது "பார்வை மாற்றுத்திறனாளி".. குவியும் பாராட்டுகள்.
முகப்பு > செய்திகள் > தமிழகம்நூறு நாள் வேலை திட்டத்தில் பணிரிந்து கொண்டே தேர்வில் முதியவர் ஒருவர் சாதித்த விஷயம், தற்போது பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், ஆழி வாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருக்கு தற்போது 55 வயதாகும் நிலையில், பார்வை மாற்றுத் திறனாளி ஆவார். மேலும் கணித பட்டப் படிப்பும் இவர் முடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
விவசாய கூலித் தொழிலாளியான ரவிச்சந்திரன், தனது கிராம மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும், நூறு நாள் வேலை திட்டத்திலும் அவர் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கையில், குரூப் 2 தேர்வை எழுதவும் ரவிச்சந்திரன் முடிவு செய்துள்ளார். இதற்காக கோச்சிங் சென்டர் சென்று படிக்க வசதி இல்லை என்ற சூழலில், தேர்வுக்கான புத்தகங்களை வாங்கி, தன்னுடன் வேலை செய்யும் 9 வகுப்பு வரை படித்த மூதாட்டி ஒருவரை படிக்க வைத்து செவி வழி கேட்டும் மனப்பாடம் செய்து கற்றுள்ளார் ரவிச்சந்திரன்.
இந்த நிலையில், குரூப் 2 பிரிலிமனரி தேர்வு எழுதி விட்டு அதன் முடிவுக்காகவும் ரவிச்சந்திரன் காத்திருந்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தேர்வில் அவர் தேர்ச்சியும் பெற்றுள்ளது, ரவிச்சந்திரனை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த கிராமத்தினரையும் இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது. பிரிலிமினரி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால் அடுத்ததாக நடைபெற உள்ள மெயின் தேர்வுக்கும் தயாராகி வருகிறார்.
55 வயதில் பார்வை மாற்றுத்திறனாளியாக இருக்கும் ரவிச்சந்திரன், முதல் அட்டெம்ப்ட்டிலேயே குரூப் 2 தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில், அடுத்த தேர்விலும் அவர் வெற்றி பெற ஒட்டுமொத்த கிராம மக்களும் அவருக்கு துணை நின்று வருவதாக தெரிகிறது. மேலும் இந்த செய்தி கூட இணையத்தில் அதிகம் வைரலாகி, பலருக்கும் பாராட்டுக்களை பெற்று கொடுத்து வருகிறது.