'சென்னை மக்களே இவரை நியாபகம் இருக்கா'... '30 வருசமா யாராலும் சிரிக்க வைக்க முடியல'... சிலை மனிதருக்கு கொரோனாவால் பறிபோன வேலை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிலை மனிதன் தாஸை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்திருக்க முடியாது. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவான விஜிபி யுனிவெர்செல் கிங்டமிற்கு செல்லும் யாராக இருந்தாலும் அவரை சிரிக்க வைக்க நிச்சயமாக முயன்றிருப்பார்கள். ஆனால் 30 வருடமாகச் சிலை மனிதனாக இருந்து கொஞ்சம் கூட சிரிக்காமல் இருந்தவரின் வாழ்க்கையை மொத்தமாகப் புரட்டிப் போட்டுள்ளது கொரோனா.
![Corona Pandemic could make Chennai’s famous statue man move on Corona Pandemic could make Chennai’s famous statue man move on](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/corona-pandemic-could-make-chennai-s-famous-statue-man-move-on.jpg)
கடந்த 1991ம் முதல் சென்னையில் சிலை மனிதனாகப் பார்க்கப்பட்ட தாஸ், தினந்தோறும் 4 மணி நேரம் சிலை மனிதனாக தனது பணியை மேற்கொள்வார். 1991ம் ஆண்டு சிலை மனிதனாக மாறிய தாஸின் அப்போதைய மாதம் ஊதியம் 600 ரூபாய். 600 ரூபாயில் துவங்கி கடந்த 30 வருடத்தில் 8,400 ரூபாய் மாத ஊதியமாக வாங்கி வந்துள்ளார். சிலை மனிதனாக நிற்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பல இடங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் முதல் குழந்தைகள் வரை பலரும் அவரை சிரிக்க வைக்க முயன்றுள்ளார்கள்.ஆனால் இதுவரை யாராலும் அவரை அசைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
காலை 9:30 மணிக்குச் சிலை மனிதனாக மாறும் தாஸ் 4 மணி நேரம் ஆடாமல் அசையால் சிலைபோன்று நிற்பது வழக்கம். இவரைத் தொடர்ந்து மற்றொரு சிலை மனிதர் நண்பகல் 2 மணி முதல் 7 மணி வரை சிலை மனிதராக இருப்பார். தான் சிலை மனிதனாக மாறும் தருணம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று கூறும் தாஸ், அந்த நேரத்தில் தனது கவனத்தைச் சிதற விடாமல் தனது பணியில் கவனமாக இருப்பேன் எனக் கூறியுள்ளார். தன்னுடைய பணி நேரம் முடிந்ததும் அந்த ஆடையைக் கழற்றிவிட்டால் நானும் சாதாரண மனிதனாக எல்லோரிடமும் சிரித்துப் பழகுவேன் எனக் கூறும் தாஸின் வாழ்க்கையை கொரோனா மொத்தமாகப் புரட்டிப் போட்டுள்ளது.
கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகம் பரவியதால் தமிழக அரசு பொதுமக்கள் கூடும் இடங்களுக்குத் தடை விதித்து அறிக்கை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் விஜிபி பொழுதுபோக்கு பூங்காவை மூடியது. நிர்வாகம் விஜிபி பூங்காவை மூடியதால் சிலை மனிதன் தாஸ்க்கு வேலை இல்லாத நிலையில் வீட்டிலிருக்கும் நிலை உருவாகியிருந்தது. கடந்த 5 மாதங்களாக வேலையின்றி வீட்டிலிருந்த அவரால் அதற்கு மேல் தனது பொருளாதார சூழ்நிலையைச் சமாளிக்க முடியவில்லை. இதனால் செக்யூரிட்டி வேலைக்குச் செல்லும் நிலைக்கு தாஸ் தற்போது தள்ளப்பட்டுள்ளார்.
60 வயதான தாஸ் கடந்த 30 வருடங்களாக யாராலும் சிரிக்க வைக்க முடியாமல், சென்னையின் ஒரு அடையாளமாகவே மாறிப்போன அவரின் வாழ்க்கையை கொரோனா மொத்தமாகப் புரட்டிப் போட்டுள்ளது தான் சோகத்தின் உச்சம்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)