கல்யாணத்துக்காக சேர்த்து வெச்ச ரூ.10 லட்சத்த எடுத்து ஊருக்கு ரோடு போட்ட தமிழ்நாடு ஐடி ஊழியர்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்து தன் சொந்த ஊருக்காக இளைஞர் ஒருவர் செய்த காரியம், தற்போது பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

திண்டிவனத்தை அடுத்த தென்கோடிப்பாக்கம் கிராமத்தின் அருகே அமைந்துள்ளது நல்லூர் என்னும் பகுதி.
இந்த கிராமத்தில் வசிக்கும் இளைஞரான சந்திரசேகரன், தனியார் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். ஐடி ஊழியரான சந்திரசேகரன் வசித்து வரும் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலை அமைக்கப்படாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, மழை பெய்தாலே மண் சாலையாக இருக்கும் அப்பகுதி முழுவதும் சேறும் சகதியாக மாறிவிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக, அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒன்றிய அலுவலகத்திற்கும் பலமுறை மனு அளித்தும் இதுவரை பெரிய அளவில் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழ்நிலையில் தான், இளைஞரான சந்திரசேகரன் அதிரடியான ஒரு முடிவையும் எடுத்துள்ளார். தன்னுடைய திருமணத்திற்காக, ஏற்கனவே சம்பாதித்த பணத்தில் இருந்து சேமித்து வைத்திருந்த சுமார் 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து, 14 அடி அகலத்திற்கு, சுமார் 280 மீட்டர் தூரத்திற்கு சிமெண்ட் சாலையும் அவரது கிராம பகுதியில் அமைத்துள்ளார் சந்திரசேகரன்.
ஆரம்பத்தில் இந்த சிமெண்ட் சாலையை அமைப்பதற்கு ஊரில் உள்ள ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்ததாக கூறப்படும் நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று இந்த சிமெண்ட் சாலையையும் சந்திரசேகரன் அமைத்துள்ளார்.
திருமணத்திற்காக கடந்த பல ஆண்டுகள் வேலை செய்து தான் சேமித்து வைத்து இருந்த பணத்தை கொண்டு, தன்னுடைய ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்த சந்திரசேகரன், பல்வேறு தடைகளையும் தாண்டி அதனை சாதித்தும் காட்டி உள்ளது தற்போது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
சந்திரசேகரன் முடிவை கிராமத்தில் உள்ள மக்கள் மட்டும் பாராட்டாமல், இது தொடர்பான செய்தியை கேள்விப்படும் பலரும் பலரும் சந்திரசேகரின் செயலுக்கு பாராட்டுக்களை அளித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
