சாலை ஓரத்துல கிடந்த BAG.. உள்ள கட்டுக்கட்டா பணம்.. கொஞ்சம் கூட யோசிக்காம போலீஸ் கான்ஸ்டபிள் செஞ்ச காரியத்தால் நெகிழ்ந்துபோன அதிகாரிகள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாசத்தீஸ்கர் மாநிலத்தில் சாலை ஓரத்தில் கிடந்த 45 லட்ச ரூபாய் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர். இதனால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
45 லட்சம்
நவ ராய்பூரில் உள்ள கயபந்தா போஸ்டில் பணிபுரியும் போக்குவரத்து காவலராக பணிபுரிபவர் நிலம்பர் சின்ஹா. இவர் கடந்த சனிக்கிழமை அன்று வழக்கம்போல தனது பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியிருக்கிறார். அப்போது சாலை ஓரத்தில் பை ஒன்று இருப்பதை அவர் பார்த்திருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த சின்ஹா, உடனே அந்த பையை எடுத்திருக்கிறார். அதனை அவர் பிரித்து பார்த்தபோது அவருக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது.
சாலை ஓரத்தில் கிடந்த பையின் உள்ளே கட்டுக்கட்டாக 2000ரூ, மற்றும் 500ரூ நோட்டுகள் இருந்திருக்கின்றன இதனையடுத்து, கொஞ்சம் கூட யோசிக்காமல் அவர் அருகில் இருந்த காவல் நிலையத்தில் அந்த பையினை ஒப்படைத்திருக்கிறார். இதனால் காவல்நிலையத்தில் இருந்த அதிகரிகள் நெகிழ்ச்சியடைந்தனர். மேலும், தன்னலம் இல்லாமல் சிறப்பாக செயல்பட்ட சின்ஹாவுக்கு அவர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கின்றனர்.
பரிசுத்தொகை
இதுகுறித்து பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுக்நந்தன் ரத்தோர்,"சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள விமான நிலையத்தில் பணி முடிந்து வீடு திரும்பும் போது போக்குவரத்து காவலர் நிலம்பர் சின்ஹா ஒரு பையை பார்த்திருக்கிறார். பையை திறந்து பார்த்தபோது அதில் ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் இருந்தது. அவர் காவல் நிலையத்திற்கு வந்து 45 லட்சம் ரூபாய் கொண்ட பையை போலீஸாரிடம் ஒப்படைத்தார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே அந்த பணத்துடன் இருந்த பையின் உரிமையாளரை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்ட உடன் அவரிடம் பணம் ஒப்படைக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதனிடையே சாலை ஓரத்தில் கிடந்த பணப் பையினை காவல்துறையில் ஒப்படைத்த போலீஸ் கான்ஸ்டபிளான நிலம்பர் சின்ஹாவுக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில், சாலை ஓரத்தில் கிடந்த 45 லட்ச ரூபாயை காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் ஒப்படைத்த நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.