வீட்டு வாசல்ல சோர்வாக நின்ன கிளி.. காப்பாத்தியவருக்கு அடிச்ச அதிர்ஷ்டம்.. கர்நாடகாவில் நடந்த சுவாரஸ்யம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் கிளியை காப்பாற்றியவருக்கு அதன் உரிமையாளர் 85,000 ரூபாய் பரிசளித்திருக்கிறார். இது அந்த பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மனிதர்கள் ஆதிகாலம் முதலே வளர்ப்பு பிராணிகளின் மீது பாசம் கொண்டிருந்திருக்கின்றனர். வீட்டில் ஒரு அங்கத்தினராக வளர்ப்பு பிராணிகளை கருதுவதை பல்லாண்டுகளாக மக்கள் பின்பற்றி வந்திருக்கின்றனர். குறிப்பாக கிளிகள் மக்களிடையே மிகவும் அன்புக்குரிய பறவையாக பார்க்கப்படுகிறது. இவை மனிதர்களின் குரல்களை அடையாளம்கண்டு அதனை திரும்பி பேசும் திறன் படைத்தவை. இதனாலேயே பலருக்கும் பார்த்தவுடன் கிளிகளை பிடித்துப்போய்விடுகிறது.
காணாமல் போன கிளி
அந்த வகையில் கர்நாடக மாநிலத்தின் துமகுரு பகுதியை சேர்ந்த அர்ஜுன் குடும்பத்தினர் கிளி ஒன்றை வளர்த்து வந்திருக்கின்றனர். ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட இந்த கிளிக்கு Rustam எனவும் பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள் அந்த வீட்டினர். இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் கிளி பறந்து சென்றிருக்கிறது. வழக்கமாக சில கிலோமீட்டர் பறந்து சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பும் தங்களது கிளி வெகுநேரமாகியும் வராததால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தில் தேடியும் அவர்களால் தங்களது கிளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து கிளியை கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு 50000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என அந்த குடும்பத்தினர் அறிவித்திருக்கின்றனர். இந்த போஸ்டர் சமூக வலை தளங்களில் வைரலானது.
பரிசுத்தொகை
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவர் தனது வீட்டு வாசலில் சில தினங்களுக்கு முன்னர் கிளி ஒன்று சோர்வுடன் நிற்பதை பார்த்திருக்கிறார். உடனே அதனை காப்பாற்றி அதற்கு உணவுகள் கொடுத்து அடைக்கலம் கொடுத்திருக்கிறார். அப்போதுதான், கிளி பற்றிய போஸ்டரை அறிந்திருக்கிறார் ஸ்ரீனிவாஸ். உடனடியாக அர்ஜுனுக்கு இதுகுறித்து தகவல் கொடுக்கவே, கிளியின் உரிமையாளர்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
இதற்குள்ளாக கிளியினை கண்டுபிடித்து தருபவர்களுக்கு கொடுப்பதாக கூறிய 50000 பரிசு தொகையை 85,000 -ஆக உயர்த்தியிருக்கிறார்கள் அர்ஜுன் குடும்பத்தார். இதனால் கிளியை பத்திரமாக மீட்டுக்கொடுத்த ஸ்ரீநிவாஸுக்கு பரிசுத்தொகையான 85,000 ரூபாயை வழங்கியிருக்கிறார் அர்ஜுன்.
இதுகுறித்து அவர் பேசுகையில்,"அவர் எங்களது கிளியை பார்த்தபோது அது சோர்வுடன் இருந்திருக்கிறது. உடனே அதற்கு உணவுகளை அளித்து அடைக்கலம் கொடுத்திருக்கிறார் ஸ்ரீனிவாஸ். இந்த கிளி எங்களது வீட்டில் 2 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது. இது எங்களது குடும்பத்தில் ஒருவர் போன்றது" என்றார் மகிழ்ச்சியாக.