“நம் நாட்டை அழிக்க நினைப்பவர்களே உண்மையான எதிரி”.. 'பாராட்டுகளை' அள்ளும் உதயாவின் 'செக்யூரிட்டி' SHORT FILM!
முகப்பு > செய்திகள் > தமிழகம்Behindwoods YouTube சேனலில் வெளியான SECURITY குறும்படத்தினை தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் பாராட்டி தமிழ்நாடு மாநில பாஜக சமூகவலைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது பதிவில், “செக்யூரிட்டி என்னும் குறும்படத்தை டைரக்டர் திரு.உதயா அவர்கள் ஒரு நல்ல தேசப்பற்றுள்ள கருத்தை முன்வைத்து எடுத்துள்ளார்” என்று எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார். இதற்கு செக்யூரிட்டி குறும்பட இயக்குநர் உதயாவும் நன்றி சொல்லி பதிவிட்டதுடன், காயத்ரி ரகுராமிற்கு கூடுதல் நன்றியையும் தெரிவித்து Behinwoods- சமூக வலைப்பக்கத்தையும் அப்பதிவில் Tag செய்துள்ளார்.
அந்த குறும்படத்தில், சீனாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த டிக்டாக் செயலிக்கு அடிமையான ‘ரவுடி டார்லிங்’ அனு என்கிற இளம் குடும்பத்தலைவி தன் கணவர் மற்றும் மகனையும் கூட டிக்டாக் லைக்கிற்கு ஆசைப்பட்டு நடிக்கச் சொல்லி டார்ச்சர் செய்கிறார். லைக் குறைந்தால் தூக்கமே வராது என்கிற அளவுக்கு அடிமையான அந்த பெண்மணிக்கு வீட்டில் சமைக்க கூட நேரமின்றி ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார். பள்ளிப்படிக்கும் சிறுவனோ ஆன்லைன் வகுப்பை சரிவர கவனிக்காமல் கேம் விளையாடுகிறான். அவனையும் கவனிக்க முடியாமல் இருந்த அந்த இளம் அம்மா ஒரு கட்டத்தில் இடிந்து போகிறார். காரணம் இந்திய அரசால் டிக்டாக் தடை செய்யப்படும் செய்தி வருகிறது.
அதன் பிறகு சோர்ந்து போன அந்த பெண்மணி, “கடிக்கலாம் வாங்க” என்கிற யூடியூப் சேனல் தொடங்கி, தனது அலப்பறையை மீண்டும் தொடர்கிறார். அப்போது குடும்பத்துடன் தனது அபார்ட்மெண்ட்டுக்குள் வரும்போது புதிய செக்யூரிட்டி தனபாலை சந்திக்க, தனபாலோ, டிக்டாக் பிரபலமான அனுவை தெரியவில்லை என்கிறார். தன்னை தெரியாததால் செக்யூரிட்டி தனபாலை ‘டிக்டாக் செலிபிரிட்டி’ அனு கடிந்துகொள்கிறார். அத்துடன் அப்டேட்டில் இருக்க வேண்டுமென்றால் முதலில் போனை மாற்றுங்கள் என்றும் கூறுகிறார்.
தனபாலின் மகன் 38 வயதான விஜயன், குடும்பத்துடன் எல்லையில் தங்கி, ராணுவத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கிறார். அவ்வப்போது தந்தைக்கு போன் செய்து பேசுகிறார். ஒருநாள் கல்வான் பள்ளத்தாக்கில் சீன படையுடன் நடந்த எல்லைச்சண்டையில் அவரது மகன் விஜயன், பல மக்களை காத்து வீரமரணம் அடைந்ததாக செய்தி வருகிறது. தனபால் உடைந்து அழுகிறார்.
இறுதியில் பலவீனமானவர்கள், பிற சாதி, மதக்காரர்கள் நம் எதிரிகள் அல்ல, நம் நாட்டை சுரண்ட நினைப்பவர்களும் அழிக்க நினைப்பவர்களும்தான் நம் எதிரி என்றும், வெளிநாட்டிலும் வெளிநாட்டுக்காகவும் வேலை பார்ப்பது கவுரம் அல்ல, தாய்நாட்டுக்காக எல்லையில் மழை, குளிர் எதையும் பொருட்படுத்தாமல் நிற்கும் ராணுவ வீரரின் பணிதான் கவுரம் என்றும் தன் பேரனும் ராணுவத்துக்கு செல்லவே விரும்புகிறான் என்றும் தனபால் குறிப்பிடுகிறார். நம் வாழ்க்கையை மற்றவர்கள் லைக் செய்து, அடுத்தவர் ஷேர் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். இறுதியில் செக்யூரிட்டியிடம் அனு அழுதபடி மன்னிப்பு கேட்கிறார். அனுவின் மகன் தனபாலிடம் வந்து ஜெய்ஹிந்த் என்று முழங்கிவிட்டு செல்கிறான்.
இப்படத்தில் செக்யூரிட்டி தனபாலாக நடிகரும், இக்குறும்படத்தின் இயக்குநருமான உதயா நடித்து இயக்கியுள்ளார். இந்த குறும்படத்தினை இணைப்பில் காணலாம்.

மற்ற செய்திகள்
