தமிழகத்தில் எங்கு வெயில்?.. எங்கு மழை?.. எங்கு அனல் காற்று?.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த 4ம்தேதி கத்திரி வெயில் தொடங்கியது. இதனை அடுத்து தொடர்ந்து அனல் வாட்டி வந்தது. கடந்த சில நாட்களாக கடலூர், நாகை, சேலம், தஞ்சை, திருச்சி, திருத்தணி, தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட பல நகரங்களில் வெயில் 100 டிகிரியை (பாரன்ஹீட் அளவு) கடந்தது. சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் சென்னை விமான நிலையம் ஆகிய பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக வெப்பநிலை 100ஐ கடந்து பதிவானது.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக, இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.
மேலும், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், தி. மலை, தென்காசி, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு மற்றும் வேலூர் 5 மாவட்டங்களில் அனல் காற்று வீசும். 5 மாவட்டங்களில் 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். அதனால், வெளியே வருவதை தவிர்க்க வேண்டுமென பொதுமக்களை கேட்டு கொண்டு உள்ளது.

மற்ற செய்திகள்
