'கொரோனா' அச்சத்தில் 'தயங்கும்' சீனர்களை... 'அசத்தலான' உணவு வகைகளால் 'கவரும்' பிரபல உணவகம்!...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவரும் வேளையில் சீனாவில் போலி இறைச்சி உணவுகள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.

இறைச்சி உணவுகளை அதிகமாக விரும்பி உண்ணும் சீனர்கள் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவற்றை முன்போல சாப்பிடத் தயங்குவதாகக் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் வவ்வாலில் இருந்து பரவியது, ஊஹானில் உள்ள கடல் உணவு சந்தையில் இருந்து பரவியது போன்ற செய்திகள் சீனர்களிடயே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதையடுத்து, அங்கு ஹோட்டல்கள் செயல்படத் தொடங்கியுள்ள போதும் பலர் இறைச்சி உணவுகளை தவிர்த்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து அமெரிக்க நிறுவனமான ஸ்டார்பக்ஸ் (Starbucks) ஃபேக் மீட் (Fake Meat) எனும் போலி இறைச்சி உணவு வகைகளை அங்கு அறிமுகப்படுத்தியுள்ளது. தாவரம் சார்ந்த பொருட்களால் தயாரிக்கப்படும் இந்த ஃபேக் மீட் உணவு வகைகள் பார்ப்பதற்கும், உண்பதற்கும் இறைச்சி போலவே இருக்கும். கொரோனா அச்சத்தால் சீனர்களும் இந்த போலியான இறைச்சி உணவு வகைகளை விரும்பி சாப்பிடத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது சீனாவில் இயங்கிவரும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்பக்ஸ் கிளைகளில் இந்த வகை உணவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த போலி இறைச்சி உணவு வகைகளை சிங்கப்பூர், தாய்லாந்து, தென்கொரியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் ஸ்டார்பக்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இதையடுத்து மற்றொரு பிரபல அமெரிக்க நிறுவனமான கேஎப்சியும் (KFC) இதே போல ஃபேக் சிக்கன், ஃபேக் நக்கெட்ஸ் போன்றவற்றை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
