‘நாங்களும் மனுஷங்கதான்’.. ‘எங்களுக்கும் பசி எடுக்கும்’.. சகோதரியா நினைச்சு ‘உதவி’ பண்ணுங்க.. திருநங்கைகள் வேதனை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் உணவில்லாமல் தவிப்பதாக திருநங்கைகள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வெளியான விகடன் செய்திக்குறிப்பில், ‘விழுப்புரத்துல மொத்தம் 300 திருநங்கைகள் இருக்கோம். 10 பேர், 20 பேருனு தனித்தனி குரூப்பா ஒவ்வொரு இடத்துல இருக்கோம். முன்னாடியெல்லாம் வீடே கொடுக்க மாட்டாங்க. ரோட்டுலையே நாய்களுக்குப் பக்கத்துல வாழ்க்கை நடத்துன நாள்களெல்லாம் கூட இருக்கு. ஆனா, இப்போ அரசாங்க குடியிருப்பில் பாதுகாப்பாக இருக்கோம். நூத்துல ஒருத்தர் ரெண்டுபேர் தான் எங்கள நம்பி வேலை கொடுக்குறாங்க. வேலை இல்லாட்டாலும் வயிறுனு ஒண்ணு இருக்குதுல. அதா ரயிலு, பஸ்ஸுனு கை நீட்டி காசு வாங்கி சாப்பிடுறோம்.
கை நீட்டி காசு வாங்கும்போது அவமானமாதான் இருக்கு. நாங்க யாரும் பிச்சை எடுக்கணும்னு நினைக்கல. ஆனா படிப்பை தொடர முடியல, வேலை கிடைக்கல, போற இடத்துல எல்லாம் விரட்டி விடுறாங்க. அப்பறம் நாங்க சாப்பாட்டுக்கு என்ன பண்றது. அதுக்காக நாங்க பிச்சை எடுக்கிறதை நியாயப்படுத்தல. வேறு வழியில்லாம நிக்கிறோம்.
அது சரி எங்க அப்பன் ஆத்தாளுக்கே எங்களைப் பற்றி புரியவைக்க முடியல. மத்தவங்களச் சொல்லி என்ன ஆகப்போகுது. இங்க இருக்கவங்களில் நிறைய பேர் காலேஜ் வரை படிச்சவங்க, ஆனா எங்கையும் வேலை கிடைக்கல. எல்லா இடத்துலேயும் ஏதாவது ஒரு புறக்கணிப்பை சந்திச்சு இருக்காங்க. படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்காம பிச்சை எடுத்து சாப்பிடுறதெல்லாம் மரண வேதனை. ஆனா அதான் விதினு வாழப் பழகிட்டோம். எங்கையாவது வேலை கிடைச்சாலும் அது காணோம், இது காணோம்னு யாரோ திருடனதுக்கு எங்கள சொல்லி வெளிய அனுப்பிருவாங்க. இப்படியான அவமானங்கள் எங்களுக்கு புதுசு இல்ல.
ஊரடங்கு விதிச்சதிலிருந்து காசு கேட்க எங்கையும் போக முடியல. அதனால் இப்போ ஒரு வேளை சாப்பாடு, ரெண்டு வேளை பிஸ்கட்னு சாப்பிட்டுகிட்டு இருக்கோம். யாராவது உதவி பண்ணுவாங்கனு நம்பிக்கையில்தான் ஒவ்வொரு நாளும் காத்திட்டு இருக்கோம். சொன்னா நம்பமாட்டீங்க ஆதரவற்று ரோட்டுல உட்கார்ந்துருக்கவங்களுக்கு ஓடி வந்து நிறைய பேர் உதவி செய்றாங்க. ஆனா நாங்க போயி சாப்பாடு தாங்கனு கேட்டா திரும்பி பார்க்காம போயிருவாங்க. நாங்களும் மனுஷங்கதான், எங்களுக்கும் பசி வரும்னு நிறையபேர் உணர்றதே இல்ல.
ஆனாலும் எங்களால் கொரோனா பரவக்கூடாது என்பதால் அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டு எங்கேயும் போகாமால் வீட்டுக்குள்ளேயே இருக்கோம். ஊருக்கு வெளியே இருக்கிறதால் யாரும் எங்களை தேடி வந்து உதவவும் முன்வரமாட்டாங்க. எங்க நிலைமையை புரிஞ்சுகிட்டு விழுப்புரம் வியாபாரிகள் காவல்துறையின் மூலமாக அரசி, பருப்புனு கொடுத்து உதவி பண்ணாங்க. கிடைச்சதை வச்சு சாப்பிட்டுகிட்டு வீட்டுக்குள்ளயே இருக்கோம். யாராவது வெளிய நடமாடுனாக்கூட வீட்டைவிட்டு வெளிய வராதீங்கனு சொல்லிட்டுதான் இருக்கோம்.
எல்லாம் சீக்கிரம் சரியாகக் கூத்தாண்டவர் துணை நிக்கணும். நிறைய பேருக்கு வருமானம் இல்லாத இந்த சூழலில் உதவி கேட்க தயக்கமாதான் இருக்கு. ஆனால் எங்களை உங்க வீட்டு சகோதரியாக நினைச்சு உதவி பண்ணுங்க’ என கண்ணீர் மல்க திருநங்கைகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
News & Photo Credits: Vikatan
