கல்யாணம் ஆன 4 மாதத்தில் கணவனுடன் சண்டை... கோபித்துக் கொண்டு வந்த பெண்ணுக்கு ரயில் நிலையத்தில் காத்திருந்த ஷாக்
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணம் முடிந்து 4 மாதத்தில் கணவருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண் திருச்சி ரயில் நிலையத்தில் போலீசாரால் மீட்கப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி அருகே பி.டபிள்யூ காலனியை சேர்ந்தவர் யுவராஜ். அவரது மனைவி சங்கீதா (23). இருவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் மனவருத்தம் அடைந்த சங்கீதா, கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறினார்.
வீட்டை விட்டு சென்றவர், சென்னையில் தங்கி வேலை பார்க்கும் தனது தோழிகள் இருக்கும் இடத்திற்கு சென்று வேலை செய்ய முடிவெடுத்துள்ளார். அதன்படி, நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்ல திண்டுக்கல்லில் டிக்கெட் எடுத்து புறப்பட்டார். ரெயிலில் செல்லும் வழியில் கோபம் தனிந்து மனம் மாறிய சங்கீதா மீண்டும் கணவரின் வீட்டிற்கே செல்ல முடிவெடுத்தார்.
இந்நிலையில், இரவு 10.15 மணிக்கு ரயில் திருச்சி வந்தடைந்தபோது ரயிலை விட்டு சங்கீதா இறங்கினார். மீண்டும் திண்டுக்கல் செல்ல ரயில் இல்லாததால் ரயில்வே பிளாட்பாரத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது சங்கீதா தனியாக நிற்பதை கவனித்த சில இளைஞர்கள் அவரை சூழ்ந்தனர். இதனாலவ் பதட்டமடைந்து ரயில் நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனிடையே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் சங்கீதாவை மீட்டனர். பின்னர் ரயில்வே போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கணவரிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாதகவும், மனம் மாறி மீண்டும் வீட்டுக்கே செல்ல காத்திருந்ததாகவும் அழுதுகொண்டே கூறியுள்ளார்.
இதையடுத்து, உள்ளூர் போலீசார் மற்றும் சங்கீதாவின் கணவர் யுவராஜூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து திண்டுக்கல்லில் இருந்து திருச்சி வந்த யுவராஜ், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு நன்றி தெரிவித்தார். பின்னர், தனது மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றார்.