மடிப்பாக்கம் போற வழி தெரியுமா.. சென்னை இளம் பெண்ணிடம் இளைஞர் கேட்ட விதம்.. புழலுக்கு வழி சொன்ன போலீஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து முகவரி கேட்பது போல் நடித்து பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த 29 வயது பெண் கடந்த 10-ம் தேதி வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ் சாலையில் நடைபயிற்சி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் அப்பெண்ணின் வாகனம் அருகே வாகனத்தை நிறுத்தி மடிப்பாக்கம் செல்வதற்கு வழி கேட்டுள்ளார்.
இதையடுத்து வழி சொல்லிக் கொண்டிருந்த பெண்ணை திடீரென அந்த இளைஞர் கையை வைத்து சீண்டியுள்ளார். இதனால் வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த பெண் பயத்தில் கூச்சலிட்டு மயங்கியதாக தெரிகிறது. இதையடுத்து அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றார்.
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளம்பெண் வேளச்சேரி காவல் நிலையத்தில் நடந்தது குறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த சுமார் 120 சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
போலீசார், விசாரணையில் பள்ளிக்கரணை, ராம் நகர் விரிவு பகுதியை சேர்ந்த கொத்தனார் சந்தோஷ் (20) என்பவர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் செல்லும்போது முகவரி கேட்பதுபோல் பாலியல் சீன்டலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதே போன்று சில மாதங்களுக்கு முன்பு சென்னை கீழ்ப்பாக்கம் பகுதிகளில் தனியாகச் செல்லும் இளம் பெண்களைக் குறி வைத்து அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்ச்சியாக பெண்களை குறிவைத்து நடப்பதால் பெற்றோர்கள் பெண்களை வெளியே அனுப்ப அஞ்சுகின்றனர்.

மற்ற செய்திகள்
