கல்யாணம் பண்ண ஒரு பொண்ணு கூட கிடைக்கல.. சாமியாராகி ஊருக்கு வந்து சொன்ன அருள்வாக்கு.. அப்படியே பலிச்சிடுச்சு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மார்த்தாண்டம்: திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தியில் ஊரை விட்டு வெளியேறி சாமியாராக மாறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்த கரவிளாகம் பகுதியை சேர்ந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் உள்பட 3 பிள்ளைகள் இருந்துள்ளனர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர்களது தந்தை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்றுள்ளார்.
யாரும் பெண் கொடுக்கவில்லை:
இந்நிலையில், குடும்ப தலைவி ஒருவரே கூலி வேலை செய்து 3 பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கியுள்ளார். 3 பிள்ளைகளில் மகளுக்கும் இரண்டாவது மகனுக்கும் திருமணம் முடிந்து விட்டது. இவர்களது மூத்த மகன் கண்ணன் (40) என்பவர் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். கண்ணனின் 23-வது வயதில் இருந்து அவருக்கு பெண் பார்க்க தொடங்கியுள்ளார். ஆனால் ஏழ்மை காரணமாக அவருக்கு பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. அதோடு, அப்பகுதியில் இருந்த சிலர் வரும் ஒருசில வரன்களையும் அவதூறு கூறி தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
காணமால் போன கண்ணன்:
சுமார் 18 வருடங்களாக பெண் தேடியும் கிக்காத காரணத்தால் கடும் மன அழுத்தத்திலேயே கண்ணன் இருந்துள்ளார். இதனால் திடீரென ஒருநாள் கண்ணனை காணவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என்று பல்வேறு இடங்களில் தேடியும் கண்ணன் குறித்து எந்தவித தகவலும் இல்லை. குடும்பத்தாரோ கண்ணன் கேரளாவிற்கு ஏதாவது கட்டிட வேலைக்கு சென்றிருக்கலாம் என எண்ணி தேடாமல் விட்டுள்ளனர். இப்படியே 5 ஆண்டுகள் சென்றுள்ளது. இதையடுத்து கிட்டத்தட்ட அனைவரும் அவரை மறந்து போயினர்.
சாமியாராக மாறினார்:
இந்நிலையில் நேற்று முன்தினம் கண்ணன் வீட்டுக்கு காவி வேட்டி அணிந்து, கழுத்தில் உத்திராட்ச மாலை, நெற்றியில் பட்டை, நீண்ட தாடி என சாமியார் ஒருவர் வந்துள்ளார். கண்ணனின் தாயாருக்கு அது தனது மகன்போல தெரிந்த நிலையில் அது கண்ணன்தான் என்பதை உறுதி செய்து கொண்டார்.
இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் முழுவதும் பரவி அனைவரும் கண்ணன் வீட்டின் முன்பு திரண்டனர். தொடர்ந்து கண்ணணை மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பலரும் அருகில் வந்து அவரிடம் நலன் விசாரித்தார். அப்போது கண்ணன் திடீரென 'இன்னும் 24 மணி நேரத்தில் ஊரில் ஒருவர் இறக்க போகிறார். அது தன்னுடைய ஞானக்கண்களுக்கு தெரிய வருகிறது' என அருள்வாக்கு கூறியுள்ளார். அதேபோல் அப்பகுதியில் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு கிடந்த கமலன் திடீரென இறந்துள்ளார்.
சிவனின் அருளை பெற்றேன்:
இதனால் ஊர் மக்கள், கண்ணன் கூறிய அருள்வாக்கு பலித்து விட்டது என்று நம்பி அவர் வீட்டுக்கு திரளேன வருகின்றனராம். அதோடு கண்ணன், தான் திருவண்ணாமலை கோயில் சென்று சிவனின் அருளை பெற்று வந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது கட்டிடத் தொழிலாளியான கண்ணன் சாமியாராக திரும்பி வந்து வண்ணான் குளத்தன்கரைக்கு சென்று அமர்ந்து அருள் வாக்கு கூறிவருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
