“25 வருஷமாவா? மொதல்ல இதயெல்லாம் நிறுத்துங்க.. நான் CM ஆக நெனைச்சதே கிடையாது”.. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி!.. ரஜினியின் அனல் பறக்கும் பதிலடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ரஜினிகாந்த் இன்று சென்னை லீலா பேலஸில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியவற்றின் சுருக்கம்:
“1996ல் இருந்து 25 வருஷமாக ரஜினிகாந்த், அரசியலுக்கு வரேன்.. அரசியலுக்கு வரேன் என்று சொல்லிக்கொண்டே இருந்ததாகக் கூறுகிறார்கள். நான் 2017 டிசம்பரில் இருந்துதான் அரசியலுக்கு வருவதாகக் கூறினேன். அதுவரை, அப்படியான கேள்விக்கு நான் அது அந்த ஆண்டவனுக்குதான் தெரியும் என்று கூறிவந்தேன். பின்னர் தீவிரமாக அரசியலை கவனிக்க தொடங்கினேன். 2017ல் எப்போது ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்கிற சூழல் நிலவியபோதுதான், என்னை வாழவைக்கும் தெய்வங்களுக்காக இந்த முடிவை எடுக்க நினைத்தேன். ஆனால் சிஸ்டம் சரி செய்யாமல் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் நினைத்தேன்.
இந்த அரசியல் மாற்றத்துக்கு 3 திட்டங்களை வைத்திருந்தேன். 2 மிகப்பெரும் கட்சிகளின் பதவிகள் தேர்தல் நேரத்தில் தேவைப்படுகின்றன. தேர்தலுக்கு பின் அவர்களில் பலர் கட்சிப்பதவிகளை தொழிலாக வைத்திருக்கிறார்கள். நாம் வீட்டில் வைக்கும் விசேஷங்களில் நிறைய பேரை சமைத்தல் உள்ளிட்ட பல்வேறு காரியங்களுக்காக வைத்துக்கொள்கிறோம். விழா முடிந்த பின் அனுப்பிவிடுகிறோம் அல்லவா?. புதியவர்கள், நல்லவர்கள் அரசியலுக்குள் வருவதில்லை. ஆக என் கட்சியில் 60 சதவீதமானோர் 50 வயதுக்குட்பட்ட படித்த, கன்னியமானவர்களை வைக்க வேண்டும் என நினைக்கிறேன். கொள்கைகள்தான் கட்சி. கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை இருக்க வேண்டும். கட்சித்தலைவர் கட்சிக்கு எதிர்க்கட்சி மாதிரி. தவறு செய்தால் திருத்துவோம்.
ஆக இளைஞர்கள் வரவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் சிலருடன் இதை விவாதித்ததில் அதனை யாரும் ஒப்புக்கொள்ளவே இல்லை. எனக்கு தூக்கி வாரிப்போட்டது. ஓய்வுபெற்ற நீதிபதிகள், அதிகாரிகள் நல்லவர்கள் பதவிக்கு வர வேண்டும். அரசியலில் எனக்கு பிடிக்காத வார்த்தை அழகு பார்ப்பது. எனவே மன்ற ஆட்களை அழைத்து, நான் முதல்வராக விருப்பமில்லை என்பதை கூறினேன். தலைவன் சொல்வதை கேட்பவர்கள்தான் தொண்டர்கள். நான் முதல்வர் பதவி வேண்டாம் என்பது ஒன்றும் பெரிய தியாகம் இல்லை” என்று கூறிய ரஜினிகாந்த் டிசம்பர் 17ஆம் தேதி தான் பேசிய வீடியோ பதிவினை ஒளிப்பரப்பினார்.
மேலும் பேசிய ரஜினி, “பேரறிஞர் அண்ணாவை போன்ற தலைவர்களை உருவாக்க நினைக்கிறேன். நான் முதல்வராக நினைத்துப் பார்க்கவே முடியாது. எனக்கு அது வரல. எனக்கு தெரியாது அது. முதல்வர்கள் வருவதற்கு பாலமாக இருப்பேன். எனக்கு 71 வயசு ஆகுது. ரஜினிகாந்த் 71 வயசுல பொழச்சு வந்திருக்கேன். வருங்கால சிஎம், வருங்கால முதல்வர்னு சொல்றதெல்லாம் நிறுத்துங்க. இதை மூலை முடுக்க மக்களிடம் நீங்கள் சொல்லுங்கள். அந்த எழுச்சி எனக்கு தெரியட்டும். அப்ப வரேன் நான். இந்தியா முழுக்க இந்த புரட்சி நடக்கணும்.கட்சி வேற, ஆட்சி வேற என்கிற புரட்சி நடக்க வேண்டும். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போ இல்லைன்னா எப்பவுமே நடக்காது. வாழ்க தமிழ்மக்கள்! வளர்க தமிழ்நாடு! ஜெய்ஹிந்த்!”.