'இவங்களோட கம்பேர் பண்ணிகிட்டா'.. 'அவருக்கு அவரே சூடு போட்டுக்கிறார்னு அர்த்தம்'.. கொங்கு ஈஸ்வரன் காட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Nov 18, 2019 04:31 PM
அண்மையில் நிகழ்ந்த விழாவில் பேசிய ரஜினி, 2 வருஷத்துக்கு முன் முதல்வராவோம் என கனவிலும் எடப்பாடி நினைத்திருக்க மாட்டார், இதே போல் 4 மாதங்களில் ஆட்சி கவிழும் என்று எல்லாருமே அன்று சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்தது... நேற்று அதிசயம் நடந்தது... இன்றும் அதிசயம் நடக்கிறது... நாளையும் நிச்சயம் அதிசயம் நடக்கும் என்று கூறியிருந்தார்.
ரஜினியின் இந்த கருத்துக்கு பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், ‘எதிர்பார்க்காமல் நடப்பதுதான் அதிசயம்தான் என்றாலும், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, தான் முதல்வர் ஆவேன் என்ற எதிர்பார்ப்போடு, நடக்கும் என்று நினைப்பது அதிசயம் ஆகாது, திடீரென்று கிராமத்திலிருந்து அழைத்துவரப்பட்டு முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் அல்ல எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் கிளை செயலாளராக, ஒன்றிய செயலாளராக, மாவட்ட செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராகவெல்லாம் இருந்துதான் ஜெயலலிதாவிற்கு பிறகான வெற்றிடம் உருவான போது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரது அறிக்கையில், ‘இதேபோல் எம்ஜிஆரும் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, திமுகவின் வெற்றிக்கு காரணமாக உழைத்து, அக்கட்சியின் பொருளாளராக உயர்ந்தவர். நடிப்பு ஒன்றால் மட்டுமே எம்ஜிஆர் முதல்வராகவில்லை. ஆகா இவர்களுடனெல்லாம் தன்னை ஒப்பிட்டுக் கொண்டு ரஜினி தானும் முதல்வர் ஆவேன் என்று நினைத்தால் தனக்குத்தானே சூடு போட்டுக்கொள்வார். 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மோடி, ரஜினியை சந்தித்த பின்னரே, ரஜினி ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பணிபுரிய வந்தார்கள். ரஜினியை சுற்றியே இருக்கும் ஒரு 10 பேர், தங்களது லாபநோக்கத்துக்காக ரஜினியை பயன்படுத்திக் கொள்ள நினைப்பதால், ரஜினியின் ஆழ்மனதை இப்படியெல்லாம் நம்பவைக்கிறார்கள். உண்மையில் எம்ஜிஆருடைய ஓட்டுக்களையும் இரட்டை இலைக்கு விழுகின்ற வாக்குகளையும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பிரிப்பதே இவரின் இலக்கு. தமிழக மக்கள் விழிப்புணர்வோடு ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரம் இது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.