தமிழக மக்களுக்கு ஒரு ‘குட் நியூஸ்’.. வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மழை பொழிவு குறித்து வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது வளிமண்டல சுழற்சியின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கனமழைக்கு வாய்ப்பு குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 3-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அதன் பின்னர் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில், ‘தற்போது குமரிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அரபிக் கடலை நோக்கி நகரக்கூடும். பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன்பின்னர் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி குஜராத் கடல் பகுதியில் மையம் கொள்ளக்கூடும். அதனால் மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மழை பொழிவு இருக்கும். இதன்காரணமாக தமிழ்நாட்டில் மழை வாய்ப்பு படிப்படியாகக் குறைய வாய்ப்பு உள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.