சென்னையில் பல பகுதிகளில் ‘கரெண்ட் கட்’.. என்ன காரணம்..? மின்சார வாரியம் வெளியிட்ட தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு முதல் விடாமல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் சுரங்கப்பாதைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. குடியிருப்புகளில் நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று (11.11.2021) மாலை சென்னை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசப்படும் என்றும், அதனால் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
இந்த நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரின் பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் சுமார் 65,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
பெரம்பூர், வியாசர்பாடி, மேற்கு மாம்பலம், தி.நகர், கே.கே நகர் மற்றும் வேளச்சேரியில் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வீடுகளுக்குள் சூழ்ந்திருக்கும் மழை நீர் குறைந்த பிறகு மின்விநியோகம் செய்யப்படும் என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.