‘கேப்டனையே கழட்டி விட்டாங்க’.. மிகப்பெரிய ‘ரிஸ்க்’ எடுக்கும் ஐபிஎல் அணி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவீரர்களை தக்க வைப்பதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி அதிரடி முடிவை எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு முதல் அகமதாபாத் மற்றும் லக்னோ என்ற இரண்டு புதிய அணிகள் இணைய உள்ளது. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்கள் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் விளையாடிய 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியது.
அதன்படி நேற்று அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி ஆகிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை ரோஹித் ஷர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ், பொல்லார்டு ஆகிய 4 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை ஆண்ட்ரே ரசல், வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் அணியில் மயங்க் அகர்வால், அர்ஸ்தீப் சிங் ஆகியோரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில், கேன் வில்லியம்சன், அப்துல் சமத், உம்ரான் மாலிக் ஆகியோரும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி அந்த அணியின் கேப்டனான இயான் மோர்கன், மூத்த வீரரான தினேஷ் கார்த்திக் ஆகியோரை தக்க வைக்கவில்லை. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கடந்த ஐபிஎல் தொடரில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டி வரை சென்றது.
அப்படி இருக்கையில் இளம் வீரர்களான வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் ஆகிய 2 இளம் வீரர்களை கொல்கத்தா தக்கவைத்துள்ளது. இதன்மூலம் கொல்கத்தா அணி மிகப்பெரிய ரிஸ்க் எடுத்துள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.