சென்னையில் இன்னும் எத்தனை நாளைக்கு மழை நீடிக்கும்..? வானிலை ஆய்வு மைய இயக்குனர் ‘முக்கிய’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் எத்தனை நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை தீபாவளிக்கு முந்தைய நாளில் இருந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் முக்கிய ஏரிகள் எல்லம் நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில் இன்று (08.11.2021) செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், ‘வட தமிழகத்தில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிக்கிறது. அதனால் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (09.11.2021) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகத்தை நெருங்கக் கூடும். அதனால் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அதேபோல் வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்’ என சென்னை வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
