'மெஷின் ஆச்சேன்னு பாக்குறேன்...' 'ஒழுங்கு மரியாதையா பணத்தை வெளிய தள்ளு...' - கடுப்பானவர் ஏடிஎம்-ஐ செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊருக்கு செல்ல பணம் இல்லாததால் ஏ.டி.எம் எந்திரத்தை அரிவாளால் வெட்டி பணம் எடுக்க முயற்சித்துள்ளார் புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

கரூர் மாவட்டத்தின் பரபரப்பு மிகுந்த பகுதியான ஜவஹர் பஜாரில் இருக்கும் கரூர் வைஸ்யா வங்கியின் ஏ.டி.எம் மையத்தை உடைத்து பணம் திருட முயற்சித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஏ.டி.எம் மையத்தின் சிசிடிவி வீடியோவை கைப்பற்றியுள்ளனர்.
அந்த வீடியோவில் நேற்று (07.11.2020) சுமார் 3மணியளவில் ஏ.டி.எம் மையத்திற்குள் நுழைந்த 25 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் சுற்றும் முற்றும் பார்த்து, தனது பையில் மறைத்து வைத்திருந்த ஒரு அரிவாள் கத்தியை எடுத்துப் பணம் எடுக்கும் எந்திரத்தை வெட்டி, 'பணத்தைக் கொடு... பணத்தை கொடு' எனக் கத்தியவாறே வெட்டு வெட்டு என வெட்டியுள்ளார்.
மேலும் பலமுறை முயற்சித்தும் ஏ.டி.எம்மிலிருந்து பணம் வராததால் ஏமாற்றம் அடைந்து, ஏ.டி.எம் இயந்திரத்தைக் கடைசியாக ஒரு முறை வெட்டிவிட்டு அந்த மையத்தை விட்டு ஓடியுள்ளார்.
இந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்டு விசாரணை நடத்திய காவல்துறையினர், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து, அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில் ஏ.டி.எம் இயந்திரத்தை வெட்டிய மர்ம நபர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த மொய்சன்குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் திருச்சியில் இருந்து கரூர் வந்த மொய்சன்குமாரிடம் பணம் இல்லாததால் குடிபோதையில் அப்பகுதியில் இருந்த பழக்கடையில் இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு ஏ.டி.எம்-ஐ உடைக்க முயற்சி செய்ததாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மற்ற செய்திகள்
