'4 கிலோ தங்கம்... பத்தரை கிலோ வெள்ளி... இன்னும் பல'... லஞ்சம் வாங்கியே ரூ.100 கோடிக்கு சொத்து!.. அரசு அதிகாரி சிக்கியது எப்படி?
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலூரில் மாசுக்கட்டுபாட்டு வாரிய முதன்மை இணை பொறியாளர் வீட்டில் 3 நாட்களாக நடக்கும் சோதனையில், வருமானத்திற்கு அதிகமாக சுமார் 100 கோடி வரை சொத்து சேர்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அத்திமாஞ்சேரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் 51 வயதான பன்னீர் செல்வம். வேலூர் காந்தி நகரில் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் வேலூர் மண்டல அலுவலகத்தில், இணை முதன்மை சுற்றுசூழல் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது இரண்டு மகன்களும் வெளிநாட்டில் கணினி பொறியாளராக பணியாற்ற மனைவி உடன் ராணிப்பேட்டை, பாரதி நகரில் பங்களா வீடு கட்டி வாழ்ந்து வருகிறார். வேலூர், ஒரே மாவட்டமாக இருந்த போது மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் வாணியம்பாடி அலுவலகத்தில் நிர்வாக பொறியாளராக பணியாற்றினார். அப்போது லஞ்சம் வாங்கி குவித்ததாக புகார் எழுந்தது.
தற்போதும் அவர் மீது புகார் தொடர்ந்ததால், செவ்வாய்க்கிழமை வேலூர் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர். 3 நாட்களாக நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத மூன்றரை கோடி ரூபாய் ரொக்கப்பணம், 4 கிலோ தங்கம், பத்தரை கிலோ வெள்ளி பொருட்கள், பட்டுப்புடவைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் சிக்கியுள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர், சேலம் உள்ளிட்ட பல இடங்களில் பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்ததற்கான ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பணம், தங்கம், வெள்ளி, சொத்து ஆவணங்கள் ஆகியவற்றின் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், லஞ்சப்புகாரில் சிக்கிய பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலூர் மண்டல அலுவலகத்தில், இணை முதன்மை சுற்றுசூழல் பொறியாளராக பணியாற்றி வரும் ஒரு அதிகாரி ஒருவர், லஞ்சமாக பணம் பெற்று 100 கோடி ரூபாய் வரை சொத்துக்கள் சேர்த்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

மற்ற செய்திகள்
